200 ரன்கள் என்பது போதுமான இலக்கு தான் ஆனால்... - தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து


200 ரன்கள் என்பது போதுமான இலக்கு தான் ஆனால்... - தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து
x

Image Courtesy: Twitter

இரண்டு கேட்சகளை தவறவிட்டது தோல்விக்கு வழி வகுத்தது என நினைக்கிறேன். நீங்கள் கேட்ச்களை தவற விடும்போது வெற்றி பெறுவது எளிதானதல்ல.

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் கேப்டன் கில் 89 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் சஷாங்க் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய சஷாங்க் சிங் 29 பந்தில் 61 ரன்னும், அசுதோஷ் சர்மா 17 பந்தில் 31 ரன்னும் எடுத்தனர். இந்நிலையில், 200 ரன்கள் என்பது போதுமான இலக்கு தான் ஆனால் சில கேட்ச்களை தவறவிட்டது தோல்விக்கு வழி வகுத்தது என குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இரண்டு கேட்சகளை தவறவிட்டது தோல்விக்கு வழி வகுத்தது என நினைக்கிறேன். நீங்கள் கேட்ச்களை தவற விடும்போது வெற்றி பெறுவது எளிதானதல்ல. பந்து வீச்சாளர்கள் அவர்களது வேலைகளை சிறப்பாக செய்தனர். பந்து பேட்டிற்கு நன்றாக வரும்போது, எதிரணியை கட்டுப்படுத்துவது கடினம். 200 ரன்கள் குறைவானது என்று நான் சொல்ல மாட்டேன்.

புது பந்தை வீசும் போது அது பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருந்தது. 15 ஓவர் வரை நாங்கள் சரியான வழியில்தான் இருந்தோம். கேட்ச்களை தவறவிட்டது எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. நீங்கள் பார்த்திராத வீரர்கள் இதுபோல் திடீரென வந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஐ.பி.எல் போட்டியின் அழகே இதுதான். கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வகையில் தர்ஷன் நல்கண்டே எங்களுக்கு சிறந்த ஆப்சனாக இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story