கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே


கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே
x
தினத்தந்தி 10 July 2017 11:00 PM GMT (Updated: 10 July 2017 8:46 PM GMT)

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

ஹம்பன்டோட்டா,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கை–ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த ஜிம்பாப்வே அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இலங்கை அணி, ஜிம்பாப்வே வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சை எதிர்கொண்டு ரன் எடுக்க முடியாமல் திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா 52 ரன்னும், குணரத்னே ஆட்டம் இழக்காமல் 59 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டும், கிரிமெர் 2 விக்கெட்டும், சதரா, சீன் வில்லியம்ஸ், மால்கம் வாலெர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஜிம்பாப்வே அணி வெற்றி

பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் மசகட்சா 73 ரன்னும், சாலோமன் மிர் 43 ரன்னும், முசகன்டா 37 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்ததுடன் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். சிக்கந்தர் ராசா 27 ரன்னுடனும், கேப்டன் கிரிமெர் 11 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர். இலங்கை அணி தரப்பில் தனஞ்செயா 4 விக்கெட்டும், மலிங்கா 2 விக்கெட்டும், குணரத்னே ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஜிம்பாப்வே அணி வீரர் சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி ஒருநாள் போட்டி தொடரை 3–2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2009–ம் ஆண்டுக்கு பிறகு ஜிம்பாப்வே அணி அன்னிய மண்ணில் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும். முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 4–வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் ஜிம்பாப்வே அணி வென்று இருந்தது. இலங்கை அணி 2–வது மற்றும் 3–வது ஆட்டத்தில் வெற்றி கண்டு இருந்தது. ஜிம்பாப்வே அணி வீரர் மசகட்சா தொடர்நாயகன் விருது பெற்றார்.

மேத்யூஸ் கருத்து

தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் கருத்து தெரிவிக்கையில், ‘எல்லா துறைகளிலும் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். எல்லா புகழும் ஜிம்பாப்வே அணியினரையே சாரும். எங்களுக்கு அவர்கள் கடினமான தருணத்தை அளித்துள்ளனர். எங்களிடம் பதில் எதுவுமில்லை. நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான ஸ்கோரே எடுத்தோம். 203 ரன்கள் என்பது போதுமான இலக்கு கிடையாது. எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்தது. இந்த போட்டி தொடரில் எங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக ஆடினார்கள். ஆனால் இந்த போட்டியில் மட்டும் அவர்கள் சரியாக செயல்படவில்லை’ என்றார்.


Next Story