பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை


பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 14 July 2017 10:15 PM GMT (Updated: 14 July 2017 7:42 PM GMT)

முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

டெர்பி,

8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இன்னும் ஒரு லீக் சுற்று எஞ்சியிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா (10 புள்ளி), இங்கிலாந்து (10 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (9 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன.

இந்த நிலையில் எஞ்சிய ஒரு அரைஇறுதி இடத்தை நிர்ணயிக்கும் வாழ்வா-சாவா? ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தியது. அதன் பிறகு 115 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய இந்திய அணி 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சு பலமாகும். மந்தனா, பூனம் ரவுத், கேப்டன் மிதாலிராஜ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா ஆகியோரின் பேட்டிங்கை பொறுத்து தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். முதல் இரண்டு ஆட்டங்களில் முறையே 90, 106 ரன்கள் விளாசி மிரட்டிய மந்தனா அடுத்த 4 ஆட்டங்களில் ஒற்றை இலக்கு ரன்னை தாண்டாதது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. வேகப்பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் இந்திய அணி ஏற்றம் காண வேண்டியது முக்கியமானதாகும்.

சுசிபேட்ஸ் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 வெற்றி (இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தானுக்கு எதிராக), 2 தோல்வி (ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக) மற்றும் ஒரு முடிவில்லை (தென்ஆப்பிரிக்காவுடன்) என்று இதுவரை 7 புள்ளிகள் எடுத்துள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது நியூசிலாந்து சற்று வலுவானது. ஆனாலும் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்கும் வேட்கையுடன் இந்திய வீராங்கனைகள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

இந்த ஆட்டத்தில் தோல்வி காணும் அணி போட்டியை விட்டு வெளியேற வேண்டியது தான். அதனால் முந்தைய தோல்விகளை மறந்து புதிய உத்வேகத்துடன் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 44 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 27-ல் நியூசிலாந்தும், 16-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. உலக கோப்பையில் இரு அணிகளும் 11 முறை சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. நியூசிலாந்து 9 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது.

இன்று நடைபெறும் மற்ற கடைசி லீக் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா, இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதுகின்றன. 

Next Story