இங்கிலாந்து டெஸ்ட் தோல்வி தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை நீக்க கோரிக்கை?


இங்கிலாந்து டெஸ்ட் தோல்வி தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை நீக்க கோரிக்கை?
x
தினத்தந்தி 3 Sep 2018 11:23 AM GMT (Updated: 3 Sep 2018 11:23 AM GMT)

தற்போது இந்தியாவிற்கு வெளியே இந்திய அணி தொடர்ந்து சொதப்பிவருவதால், ரவி சாஸ்திரிக்கு எதிரான குரல்கள் வலுத்துள்ளன.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று மீண்டெழுந்தது. ஆனால் அந்த வெற்றியை தொடர முடியாமல் நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்று தொடரை இழந்தது.

ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்தியாவிற்கு வெளியே இந்திய அணியின் ஆட்டம் பெரிதாக சொல்லும்படியாக இல்லை. தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இங்கிலாந்திலும் தொடரை இழந்துள்ளது.

இந்நிலையில், ரவி சாஸ்திரியை தூக்கிவிட்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. நெட்டிசன்கள் ரவி சாஸ்திரியை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அதே நேரத்தில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற சிறந்த முன்னாள் வீரர்களை தலைமை பயிற்சியாளராக நியமிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.

அனில் கும்ப்ளேவின் பயிற்சியின் கீழ் இந்திய அணி வெளிநாடுகளிலும் சிறப்பாக ஆடியது. அணியை சிறப்பாகவே வழிநடத்தி சென்றார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. அதன்பிறகு மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே விண்ணப்பித்திருந்தார். எனினும் விராட் கோலியின் ஆதரவு ரவி சாஸ்திரிக்கு இருந்ததால் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளரானார். விராட் கோலிக்கும் கும்ப்ளேவிற்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவிற்கு வெளியே இந்திய அணி தொடர்ந்து சொதப்பிவருவதால், ரவி சாஸ்திரிக்கு எதிரான குரல்கள் வலுத்துள்ளன. ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்திவருகின்றனர்.

Next Story