கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல் + "||" + Asia Cup: India-Pakistan clash again

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் மோதுகின்றன.
துபாய்,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் இன்று அரங்கேறும் முக்கியமான ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதுகிறது.

சூப்பர்-4 சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை பந்தாடிய இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் கிட்டத்தட்ட இறுதிப்போட்டியை உறுதி செய்து விட முடியும். நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானை லீக் சுற்றில் 162 ரன்களில் சுருட்டி மெகா வெற்றியை பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும் (127, 46, 40 ரன்) கேப்டன் ரோகித் சர்மாவும் (23, 52, 83 ரன்) நல்ல தொடக்கம் அளிப்பதும், வேகப்பந்து வீச்சில் பும்ரா, புவனேஷ்வர்குமார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் கலக்குவதும் இந்திய அணியின் வீறுநடைக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. அந்த வெற்றிப்பயணத்தை இந்த ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் தொடர்வதில் ஆர்வமாக உள்ளனர்.

அதே சமயம் தனது சூப்பர்-4 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை போராடி வென்ற பாகிஸ்தான் அணி, இந்த முறை மிகுந்த கவனமுடன் விளையாடும். லீக்கில் அடைந்த தோல்விக்கு வஞ்சம் தீர்க்கும் குறிக்கோளுடன் வரிந்து கட்டி நிற்பார்கள். தொடர்ந்து இரு ஆட்டத்தில் டக்-அவுட் ஆன தொடக்க ஆட்டக்காரர் பஹார் ஜமான் அதற்கு பரிகாரம் தேட முயற்சிப்பார். இந்த ஆட்டத்திற்கு புதிய ஆடுகளம் பயன்படுத்தப்பட இருப்பதால், அதில் தாக்கத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் பவுலர்கள் தீவிர முனைப்பு காட்டுவார்கள்.

பொதுவாக இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்ச்சி வசத்தில் கிளர்ந்தெழுவார்கள். ஆனால் கடைசியாக இவ்விரு அணிகளும் சந்தித்த 4 ஆட்டங்கள் உப்புசப்பின்றி ஒரு தரப்பாகவே முடிந்தது. இந்த முறையாவது களத்தில் திரிலிங்குடன் அனல்பறக்குமா? என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான்: பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, ஷதப் கான் அல்லது ஹாரிஸ் சோகைல், முகமது நவாஸ், ஷகீன் அப்ரிடி, ஹசன் அலி, உஸ்மான் கான்.

அபுதாபியில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேச அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி காணும் அணியே இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க முடியும். தோற்றால் ஏறக்குறைய வெளியேறி விட வேண்டியது தான். அதனால் இரு அணி வீரர்களும் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்று நம்பலாம். லீக் சுற்றில் வங்காளதேசத்துக்கு அதிர்ச்சி அளித்திருந்த ஆப்கானிஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி ஆகிய சுழலை சமாளித்தால் மட்டுமே வங்காளதேச அணியால் எழுச்சி பெற முடியும்.

வங்காளதேச அணிக்கு சவும்யா சர்கார், இம்ருல் கேயஸ் ஆகியோர் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வருகை அந்த அணிக்கு வலு சேர்க்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனலில் காணலாம்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிற்கு எதிராக ஜெஎப் 17 தண்டர் விமானத்தைதான் பயன்படுத்தினோம் - பாகிஸ்தான் ராணுவம்
இந்தியாவிற்கு எதிராக ஜெஎப் 17 தண்டர் விமானத்தைதான் பயன்படுத்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
2. அஸ்லான் ஷா ஆக்கி: இந்தியா-கொரியா ஆட்டம் ‘டிரா’
6 அணிகள் இடையிலான 28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது.
3. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் பலி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.
4. ‘மற்றொரு தாக்குதல் நடத்தினால் : இந்தியா சும்மா இருக்காது’ பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மற்றொரு தாக்குதல் நடத்தினால் : இந்தியா சும்மா இருக்காது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
5. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை
இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு மிகவும் மோசமானதாக அமையும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.