முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை


முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 3 Nov 2018 11:30 PM GMT (Updated: 3 Nov 2018 7:51 PM GMT)

கொல்கத்தாவில் இன்று நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொல்கத்தா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 1-3 என்ற கணக்கிலும் பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரோகித் சர்மா அணியை வழிநடத்த உள்ளார். மூத்த வீரரும், விக்கெட் கீப்பருமான டோனி அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பதால் ரிஷாப் பான்ட் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார்.

உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர் கிரிக்கெட்டில் எப்போதும் அச்சுறுத்தக்கூடிய ஒரு அணி. கீரன் பொல்லார்ட், டேரன் பிராவோ போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் திரும்பியிருக்கிறார்கள். 2 ஆண்டுக்கு முன்பு இதே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்களை விளாசி மகுடம் சூட வைத்த கார்லஸ் பிராத்வெய்ட் அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார். அதனால் இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம்.

இதற்கிடையே, ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல்லும் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் அணிக்கு தேர்வாகி இருந்தார். ஆனால் ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக்கில் ஆடிய போது கால் முட்டியில் காயமடைந்த அவர், இன்னும் குணமடையாததால் இந்தியாவுக்கு வரவில்லை. அவர் 20 ஓவர் தொடரில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வெஸ்ட் இண்டீசுக்கு பின்னடைவாக அமையும். ஏற்கனவே கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய பயணத்தை தவிர்த்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக டோனி நமது அணியில் ஒரு மிகப்பெரிய வீரராக இருக்கிறார். களத்தில் அவரது அனுபவத்தையும், விக்கெட் கீப்பிங் சாமர்த்தியத்தையும் தவற விடுகிறோம். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர்கள் ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்த இது அருமையான வாய்ப்பாகும். இருவரும் 20 ஓவர் கிரிக்கெட்டில் தங்களது மாநில அணிக்காகவும், ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடியுள்ளனர். எனவே அவர்களை சோதித்து பார்க்க இது அருமையான சந்தர்ப்பமாகும். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஒரே ஒரு விக்கெட் கீப்பருடன் செல்ல முடியாது. மாற்று வீரரும் அவசியமாகும்’ என்றார்.

ஒரு சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பது குறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பிய போது, ‘வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் போது பணிச்சுமை குறையும். அது மட்டுமின்றி அணிக்கு வெளியே இருக்கும் வீரர்களின் பலத்தையும் அறிய வேண்டியது முக்கியமானது. அதனால் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்குவது தேவையானது தான்’ என்றார்.

போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரரான ஆல்-ரவுண்டர் குணால் பாண்ட்யாவும் இடம் பெற்று இருப்பதால் அவர் அறிமுக வீரராக அடியெடுத்து வைக்க வாய்ப்பு உள்ளது. ஆடுகளத்தை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடக்கூடும்.

இவ்விரு அணிகளும் இதுவரை எட்டு 20 ஓவர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 2-ல் இந்தியாவும், 5-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ரிஷாப் பான்ட், குணால் பாண்ட்யா அல்லது யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது.

வெஸ்ட் இண்டீஸ்: ரோவ்மன் பவெல், டேரன் பிராவோ, ரூதர்போர்டு, ஹெட்மயர், கீரன் பொல்லார்ட், கார்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), தினேஷ் ராம்டின், பாபியான் ஆலென், காரி பியாரே, ஒஷானே தாமஸ், ஒபேட் மெக்கோய்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

‘வெஸ்ட் இண்டீஸ் அபாயகரமானது’

“வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உள்ளூர் 20 ஓவர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி நிறைய அனுபவத்தை பெற்றுள்ளனர். 20 ஓவர் போட்டியில் எப்போதும் உற்சாகமாக விளையாடுவார்கள். அதனால் இந்த ஆட்டம் எளிதாக இருக்காது. அவர்களின் பலம், பலவீனம் என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் ஒரு அபாயகரமான அணி. 20 ஓவர் கிரிக்கெட்டின் உலக சாம்பியன் அவர்கள் தான். 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை உலகின் வலுவான அணிகளில் ஒன்றாக அவர்கள் திகழ்கிறார்கள்”. - இந்திய கேப்டன் ரோகித் சர்மா




Next Story