பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி
x
தினத்தந்தி 19 Nov 2018 11:00 PM GMT (Updated: 19 Nov 2018 9:39 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

அபுதாபி,

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 153 ரன்களும், பாகிஸ்தான் அணி 227 ரன்களும் எடுத்தன.

74 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக வாட்லிங் 59 ரன்னும், ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா தலா 5 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதனை அடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்து இருந்தது. இமாம் உல்-ஹக் 25 ரன்னுடனும், முகமது ஹபீஸ் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஆடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சுழற்பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் தொடக்க விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. இமாம் உல்-ஹக் 27 ரன்னிலும், முகமது ஹபீஸ் 10 ரன்னிலும், ஹாரிஸ் சோகைல் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 48 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு ஆசாத் ஷபிக், அசார் அலியுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 130 ரன்னாக உயர்ந்த போது ஆசாத் ஷபிக் (45 ரன்கள்) ஆட்டம் இழந்தார். ஆசாத் ஷபிக், அசார் அலி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், அதன் பிறகு களம் கண்ட வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்ததால் போட்டி நியூசிலாந்துக்கு சாதகமாக திரும்பியது. நிலைத்து நின்று ஆடிய அசார் அலி 136 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் அஜாஸ் பட்டேல் பந்து வீச்சில் எ.பி.டபிள்யூ. ஆகி கடைசி விக்கெட்டாக வெளியேறினார். அவரது போராட்டம் வீணானது.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 58.4 ஓவர்களில் 171 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சோதி, வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். டெஸ்ட் போட்டியில் ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியின் மிகச் சிறிய வெற்றி இதுவாகும். மொத்தம் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து அறிமுக வீரர் அஜாஸ் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


Next Story