‘பந்து வீச்சில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்’ - அஸ்வின் பேட்டி


‘பந்து வீச்சில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்’ - அஸ்வின் பேட்டி
x
தினத்தந்தி 30 Nov 2018 11:15 PM GMT (Updated: 30 Nov 2018 10:36 PM GMT)

பந்து வீச்சில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என அஸ்வின் தெரிவித்தார்.

சிட்னி,

பயிற்சி கிரிக்கெட்டில் 3-வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாம் பந்து வீச்சிலும் கூட நெருக்கமான கூட்டணி அமைத்து செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். பந்து வீச்சில் நல்ல கூட்டணியை உருவாக்குவதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். எல்லா நேரங்களிலும் எதிரணியின் விக்கெட்டை எளிதில் வீழ்த்தி விட முடியாது. இருப்பினும் பந்து வீச்சில் நாம் தொடர்ந்து முன்னிலையில் இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எனவே பந்து வீச்சாளர்கள் தொடர் முழுவதும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையில் நான் முதல் இன்னிங்சில் விக்கெட் வீழ்த்துவது முக்கியமானதாகும். கடந்த முறை இங்கு நடந்த தொடரில் நான் சிறப்பாக செயல்பட்டேன். அது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

காயம் அடைந்த பிரித்வி ஷா மிகவும் சோர்வாக உள்ளார். காலில் வீக்கம் இருக்கிறது. அவர் காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவார் என்று நம்புகிறேன். இந்த காயம் பிரித்வி ஷாவை அதிகம் பாதித்துள்ளது. இளம் வீரரான அவர் முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு விளையாட வந்துள்ளார். காயம் எதிர்பாராமல் நடப்பதாகும். இதுபோல் எப்பொழுதும் நடக்க தான் செய்யும். இது மற்றொருவருக்கு வாய்ப்பாகும். எல்லாமே இங்கு காரணத்துக்காகவே நடக்கிறது என்று நான் நம்புகிறேன். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை வெல்வது என்பது எளிதான காரியமல்ல. என்னை பொறுத்தமட்டில் இப்போதைக்கு ஆஸ்திரேலியா தான் வெற்றி வாய்ப்புள்ள அணியாக தெரிகிறது’. இவ்வாறு அஸ்வின் கூறினார்.


Next Story