‘ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார்’ - புஜாரா நம்பிக்கை


‘ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார்’ - புஜாரா நம்பிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2018 11:15 PM GMT (Updated: 3 Dec 2018 10:54 PM GMT)

‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார்’ என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா நம்பிக்கை தெரிவித்தார்.

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் அடிலெய்டில் தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 11 முறை டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி இருக்கும் இந்திய அணி ஒருமுறை கூட தொடரை வென்றது கிடையாது. பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் அணியில் இடம் பெறாததால் ஆஸ்திரேலியா பலவீனம் அடைந்துள்ளது. எனவே இந்த முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சரித்திரத்தை மாற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பந்து வீச்சில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை. 64 டெஸ்ட் போட்டியில் விளையாடி 336 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் அஸ்வின், ஆஸ்திரேலிய மண்ணில் 6 டெஸ்ட் போட்டியில் ஆடி 21 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார் என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அடிலெய்டில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அஸ்வின் புத்திசாலியான பந்து வீச்சாளர் என்று நான் எப்பொழுதும் சொல்வேன். அவர் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை நன்றாக கணித்து செயல்படக்கூடியவர். அவர் தனது பந்து வீச்சு முறையில் நிறைய மாற்றங்கள் செய்து இருக்கிறார். அது என்ன என்பதை நான் விவரிக்க விரும்பவில்லை. ஆனால் அவர் செய்துள்ள மாற்றங்கள் நிச்சயம் அவருக்கு உதவும். அவர் இந்த ஆண்டில் கவுண்டி போட்டியில் போதுமான அளவில் விளையாடி இருக்கிறார். அத்துடன் வெளிநாட்டு மண்ணில் பல்வேறு விதமான ஆடுகளங்களில் ஆடிய அனுபவம் அவருக்கு உண்டு. 2014-15-ம் ஆண்டில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் விளையாடி உள்ளார். எனவே ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால் அவர் நல்ல நம்பிக்கையுடன் இருப்பார்.

நமது அணியின் வேகப்பந்து வீச்சு உலகின் சிறந்த பந்து வீச்சுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஐ.பி.எல். போட்டியின் மூலம் நமது நாட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள். இது இந்திய டெஸ்ட் அணிக்கு தற்போது உதவிகரமாக இருக்கிறது. நமது அணியில் ஆடும் லெவனில் இடம் பெறாத வேகப்பந்து வீச்சாளர்கள் கூட நல்ல நிலையில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 544 ரன்கள் விட்டுக்கொடுத்தது பெரிய விஷயம் இல்லை. அது டெஸ்ட் போட்டி அல்ல. எனவே அது குறித்து கவலைப்படவில்லை. நமது பவுலர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். நமது பந்து வீச்சாளர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த முறை இங்கு நடந்த தொடரில் விளையாடி இருக்கிறார்கள். எனவே இங்கு எந்த மாதிரி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். பந்து வீச்சாளர்கள் நல்ல நம்பிக்கையுடன் உள்ளனர்.

பேட்டிங்கில் எங்களுக்கு சில இலக்குகள் உள்ளன. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி இருப்பதாக நான் நினைக்கவில்லை. நமது அணியில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் போதுமான அனுபவம் கொண்டவர்கள். கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணி வீரர்களில் சிலரது பந்து வீச்சை நான் சந்தித்து இருக்கிறேன். எனவே அவர்களது பலம், பலவீனம் எனக்கு தெரியும். அந்த அனுபவம் இந்த போட்டி தொடரில் எனக்கு உதவும். ஆனால் இந்த போட்டி தொடர் புதியதாகும். எனவே கடந்த காலங்களில் நான் செய்தது பற்றி அதிகம் கவனம் செலுத்த விரும்பவில்லை. நான் நல்ல நம்பிக்கையுடன் உள்ளேன். அதேநேரத்தில் எதிரணிக்கும் மதிப்பளிக்க விரும்புகிறேன்.

தற்போது நாங்கள் இந்தியாவுக்கு வெளியிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இந்த போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருப்பதால் எல்லா போட்டி தொடரிலும் வெற்றி பெற வேண்டும் என்று தான் எப்பொழுதும் நாங்கள் நினைக்கிறோம். இந்த போட்டி தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் நல்ல தொடக்கம் காண வேண்டும் என்றும் விரும்புகிறோம். இந்த போட்டி தொடரை நிச்சயம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். அதேநேரத்தில் தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் தான் எங்கள் கவனம் உள்ளது. ஒவ்வொரு போட்டியாக கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எதிரணியினரை கோபமூட்டும் வகையில் பேசுவது (சிலெட்ஜிங்) குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. டெஸ்ட் போட்டி தொடங்கிய பிறகு எதிரணியினர் செய்யும் சீண்டல்களில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்த மாட்டோம். நன்றாக விளையாடி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதில் தான் நாங்கள் கவனம் செலுத்துவோம் என்று புஜாரா கூறினார்.


Next Story