இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 178 ரன்னில் ஆல்-அவுட்


இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 178 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 26 Dec 2018 10:15 PM GMT (Updated: 26 Dec 2018 7:13 PM GMT)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 178 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்தது. புற்கள் நிறைந்த ஆடுகளம், மேகமூட்டமான சூழலில் வேகப்பந்து வீச்சு எடுபட்டது. டாம் லாதம் (10 ரன்), கேப்டன் வில்லியம்சன் (2 ரன்), ராஸ் டெய்லர் (27 ரன்) உள்பட 6 முன்னணி வீரர்கள் 64 ரன்னுக்குள் நடையை கட்டினர். இதன் பின்னர் 7-வது விக்கெட்டுக்கு வாட்லிங்கும், டிம் சவுதியும் கைகோர்த்து 108 ரன்கள் சேர்த்து அணியை கவுரவமான நிலைக்கு உயர்த்தினர். வாட்லிங் 46 ரன்னிலும், டிம் சவுதி 68 ரன்னிலும் (65 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்கள். முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் சுரங்கா லக்மல் 5 விக்கெட்டுகளும், லாஹிரு குமாரா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 32 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் (27 ரன்), ரோஷன் சில்வா (15 ரன்) அவுட் ஆகாமல் உள்ளனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.


Next Story