‘தனிப்பட்ட வீரர்களின் விருப்பங்களை விமர்சிக்காதீர்’ - முன்னாள் வீரர்களுக்கு டோனி வேண்டுகோள்


‘தனிப்பட்ட வீரர்களின் விருப்பங்களை விமர்சிக்காதீர்’ - முன்னாள் வீரர்களுக்கு டோனி வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Dec 2018 11:15 PM GMT (Updated: 28 Dec 2018 7:33 PM GMT)

தனிப்பட்ட வீரர்களின் விருப்பங்களை விமர்சிக்காதீர்கள் என முன்னாள் வீரர்களுக்கு டோனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடுகிறார். உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிக்கு விடைகொடுத்து விட்ட அம்பத்தி ராயுடு, குறுகிய வடிவிலான போட்டிகளில் கவனம் செலுத்துகிறார். ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாஹல் போன்ற வீரர்கள் இந்த சீசனில் ரஞ்சி போட்டிகளில் ஆடுவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.

இதை விமர்சித்த முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், சர்வதேச போட்டி இல்லாத காலங்களில் தொடர்ந்து உடல்தகுதியுடனும், ஆட்டத்திறன் குறையாமல் இருக்கவும் உள்ளூர் முதல்தர போட்டிகளில் டோனி ஆட வேண்டும் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று நடந்த புத்தகம் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட டோனி இந்த விஷயத்தை சுட்டி காட்டி, ‘குறிப்பிட்ட வடிவிலான போட்டிகளில் மட்டும் விளையாடும் தனிப்பட்ட வீரர்களின் விருப்பத்தை விமர்சிக்க கூடாது. இதே போல் 20 ஓவர் போட்டிகளையும் அதிகமாக குறை சொல்லக்கூடாது’ என்று கேட்டுக் கொண்டார். தற்போது இந்திய அணி விளையாடி வரும் விதம் மகிழ்ச்சி அளிப்பதாகவும், டெஸ்டில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றக்கூடிய பந்து வீச்சாளர்கள் நம்மிடம் இருப்பாகவும் குறிப்பிட்டார்.

“இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசனிடம் நான் நிறைய கற்று இருக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் நீண்ட காலமாக இருப்பதால் அவருடன் நட்பு ரீதியாக பழகி இருக்கிறேன். அவருடன் எனக்கு எப்போதும் பாசப்பிணைப்பு உண்டு” என்றும் டோனி கூறினார்.


Next Story