சிறந்த குழந்தை பராமரிப்பாளர் பான்ட்: பெய்னின் மனைவி வெளியிட்ட ருசிகர போட்டோ


சிறந்த குழந்தை பராமரிப்பாளர் பான்ட்: பெய்னின் மனைவி வெளியிட்ட ருசிகர போட்டோ
x
தினத்தந்தி 1 Jan 2019 10:15 PM GMT (Updated: 1 Jan 2019 10:01 PM GMT)

மெல்போர்ன் டெஸ்டின் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டுக்கும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்னுக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது.

சிட்னி, 

மெல்போர்ன் டெஸ்டின் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டுக்கும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்னுக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது. ரிஷாப் பான்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, டிம் பெய்ன் சக வீரரிடம் பேசுவது போல், ‘இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு விக்கெட் கீப்பர் டோனி வந்து விட்டார். அதனால் ரிஷாப் பான்டுக்கு இடம் இல்லை. அவரை பிக்பாஷ் கிரிக்கெட்டில் சேர்த்துக் கொள்ளலாம். தங்குவதற்கு ஒரு வீடு வழங்கலாம். அப்புறம் எனது குழந்தைகளை அவர் பார்த்துக் கொள்வாரா? நானும், என் மனைவியும் இரவில் சினிமாவுக்கு செல்லும் போது அவர் தான் எனது இரண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்று டிம் பெய்ன் கூறி கிண்டலடித்தார். இதற்கு பதிலடி கொடுத்த ரிஷாப் பான்ட், ‘டிம் பெய்ன் ஒரு தற்காலிக கேப்டன். அவருக்கு பேசுவதற்கு மட்டுமே தெரியும்’ என்று கூறினார்.

இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிஷாப் பான்ட், அங்கு வந்த டிம் பெய்னின் மனைவி போனியையும் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவரது குழந்தையை தூக்கி வைத்து மகிழ்ந்தார். தனது குழந்தையுடன் ரிஷாப் பான்ட் இருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள டிம் பெய்னின் மனைவி போனி, ‘சிறந்த குழந்தை பராமரிப்பாளர், ரிஷாப் பான்ட்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். டிம் பெய்னின் சவாலை ரிஷாப் பான்ட் ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றி விட்டதாக ஐ.சி.சி. நகைச்சுவையாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

Next Story