பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 31 Jan 2019 10:30 PM GMT (Updated: 31 Jan 2019 9:04 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

கேப்டவுன்,

பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பஹார் ஜமான் 70 ரன்னும், இமாத் வாசிம் 47 ரன்னும் (நாட்-அவுட்), சோயிப் மாலிக் 31 ரன்னும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் பிரிட்டோரியஸ், பெலக்வாயோ தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் 83 ரன்கள் (58 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 50 ரன்னும், வான்டெர் துஸ்சென் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். தென்ஆப்பிரிக்க அணி வீரர் குயின்டான் டி காக் ஆட்டநாயகன் விருதையும், பாகிஸ்தான் வீரர் இமாம் உல்-ஹக் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 13 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தன.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கேப்டவுனில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என்.சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story