டிராவிட்டிடம் நான் அப்படி நடந்திருக்க கூடாது! 22 ஆண்டுகளுக்கு பிறகு வருத்தப்பட்ட வீரர்


டிராவிட்டிடம் நான் அப்படி நடந்திருக்க கூடாது! 22 ஆண்டுகளுக்கு பிறகு வருத்தப்பட்ட வீரர்
x
தினத்தந்தி 2 Feb 2019 11:21 AM GMT (Updated: 2 Feb 2019 11:21 AM GMT)

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டொனால்டு, டிராவிட்டை ஸ்லெட்ஜிங் செய்தது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் செய்வது இப்போது வழக்கமாக இருந்தாலும், 1990-களில் ஸ்லெட்ஜிங் மிக மோசமாக இருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா என அனைத்து அணிகளுமே எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தன. இது போன்று இருக்கும் போது தான் கடந்த 1997-ஆம் ஆண்டு நடந்த முத்தரப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியின் அப்போதைய வேகப்பந்து வீச்சாளர் டொனால்டு,  டிராவிட்டை ஸ்லெட்ஜிங் செய்தார்.

இதனால் டிராவிட் அந்த போட்டி முடிந்த பின் பேசாமல் சென்றார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஆலன் டொனால்டு இப்போது மனம் வருந்தியுள்ளார். 

இது குறித்து டொனால்டு  கூறுகையில், 1997-ல் நடந்த முத்தரப்பு தொடரில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இறுதி போட்டியில், ராகுல் டிராவிட்டை மிகவும் மோசமாக ஸ்லெட்ஜிங் செய்தேன். ஆனால் அந்த நேரத்தில் டிராவிட்டின் விக்கெட் தேவைப்பட்டது. நான் ஸ்லெட்ஜிங் செய்ததற்கு இரண்டு ஓவர்களுக்கு பிறகு டிராவிட் அவுட்டாகிவிட்டார்.

அந்த போட்டியில் நாங்கள் வெற்றியும் பெற்றோம். ஆனால் நான் ராகுல் டிராவிட்டை ஸ்லெட்ஜிங் செய்த அந்த தருணம் தான் என் கிரிக்கெட் வாழ்வின் மோசமான தருணம். அந்த போட்டிக்கு பின்னர் ராகுல் டிராவிட்டிடம் பேச முயன்றேன். ஆனால் அவர் என்னிடம் பேச மறுத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

Next Story