உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்பு வார்னே கருத்து


உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்பு வார்னே கருத்து
x
தினத்தந்தி 6 March 2019 9:30 PM GMT (Updated: 6 March 2019 9:16 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30–ந் தேதி தொடங்குகிறது.

சிட்னி,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30–ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே டெலிவி‌ஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

2003–ம் ஆண்டில் எனக்கு 12 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டது. அப்போது நான் புத்துணர்ச்சி பெற்றதுடன், கிரிக்கெட் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து என்னுடைய ஆட்ட முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தினேன். அத்துடன் மீண்டும் களம் திரும்பிய போது சாதித்து காட்ட வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டேன். இதேபோல் தடை விதிக்கப்பட்டு களம் திரும்ப இருக்கும் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் ஆகியோர் தங்களது திறமையை களத்தில் நிரூபித்து காட்டுவதில் தீவிரமாக இருப்பார்கள். அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வெல்ல காரணமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இருவரது ஆட்ட சாதனைகளை பார்த்தாலே அவர்களது தரம் எல்லோருக்கும் தெரியவரும்.

டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் ஆகியோர் அணிக்கு திரும்புவதன் மூலம் ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து, இந்தியா அணிகளும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. நியூசிலாந்து அணி ஆச்சரியம் அளிக்கக்கூடியதாகும். உலக கோப்பை மற்றும் பெரிய போட்டிகளில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியிலும் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்படும்.

இவ்வாறு ஷேன் வார்னே கூறினார்.


Next Story