பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் இன்று நடக்கிறது


பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 21 March 2019 10:45 PM GMT (Updated: 21 March 2019 9:12 PM GMT)

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் இன்று நடக்கிறது.

சார்ஜா,

இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளது. இங்கு பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சார்ஜாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி ஆடும் கடைசி சர்வதேச தொடர் இது தான். அதனால் அந்த அணிக்கு இந்த தொடர் முக்கியமானதாக அமைந்துள்ளது.

இந்திய தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது, அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் டர்னர் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கிறார்கள். பாகிஸ்தான் தொடரிலும் அசத்தும் பட்சத்தில் உலக கோப்பை போட்டியில் இவர்களுக்கு இடம் கிடைப்பது உறுதியாகி விடும். இந்த தொடருக்கு பிறகு ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் அணியில் இணைந்து விடுவார்கள். அதனால் சில வீரர்களின் இடம் காலியாகி விடும். அத்தகைய வீரர்கள் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆட முயற்சிப்பார்கள்.

இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தது. பெரிய அளவில் ரன்கள் குவிப்பது கடினமானது. அதனால் ஆடம் ஜம்பா, நாதன் லயன் ஆகியோரின் சுழற்பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அதிரடி மன்னன் கிளைன் மேக்வெல்ஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் முதலாவது ஆட்டத்தில் ஆடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பாபர் அசாம், ஹசன் அலி, பஹார் ஜமான் உள்பட 6 முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர் சோயிப் மாலிக் அணியை வழிநடத்த உள்ளார். உமர் அக்மல், யாசிர் ஷா, ஜூனைட் கான் உள்ளிட்டோர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தானில் நடக்க வேண்டிய ஆட்டங்கள் எல்லாம் அமீரகத்தில் தான் நடத்தப்படுகிறது. இது, அவர்களுக்கு சொந்த ஊர் மாதிரி. இங்குள்ள சீதோஷ்ண நிலையை நன்கு அறிவார்கள். எனவே ஆஸ்திரேலிய அணிக்கு பாகிஸ்தான் கடும் சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 98 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 62-ல் ஆஸ்திரேலியாவும், 32-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டை ஆனது. மூன்று ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை. கடைசியாக இவ்விரு அணிகளும் சந்தித்த 10 ஆட்டங்களில் 9-ல் ஆஸ்திரேலியா வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதல் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story