உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்: பஞ்சாப் அணி இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்பு


உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்: பஞ்சாப் அணி இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 1 May 2019 11:30 PM GMT (Updated: 1 May 2019 7:42 PM GMT)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் எதிரொலியாக அந்த அணி இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வரும் 8 அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. இந்த அணியின் உரிமையாளர்களாக நடிகை பிரீத்தி ஜிந்தா, தொழிலதிபர் நெஸ் வாடியா உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.

நெஸ் வாடியா சில மாதங்களுக்கு முன்பு விடுமுறை கொண்டாட்டத்திற்காக ஜப்பான் சென்ற போது விமான நிலையத்தில், போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சோதனையில் அவர் 25 கிராம் கஞ்சாவை தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. சொந்த தேவைக்காக அதை வைத்திருந்ததாக கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜப்பான் கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனாலும் ஜப்பான் சட்டப்படி குறிப்பிட்ட நிபந்தனைக்குட்பட்டு அவர் சிறை தண்டனையை அனுபவிக்க தேவையில்லை. நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனை என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகள் அவரது நடத்தை கண்காணிக்கப்படும். மீண்டும் இது போன்ற குற்றச்சாட்டில் சிக்கினால் சிறைக்கு செல்ல நேரிடும்.

இந்த நிலையில் நெஸ் வாடியாவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. ஐ.பி.எல். விதிமுறைகளின்படி அணியின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் யாரும் ஐ.பி.எல். போட்டிக்கோ, கிரிக்கெட் வாரியத்தின் புகழுக்கோ களங்கம் கற்பிக்கும் வகையில் மைதானத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால் அந்த நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அணி இடைநீக்கம் செய்யப்படும்.

உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டது அம்பலமானதால் தான் இவ்விரு அணிகளுக்கும் 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இது போன்ற தடையை பஞ்சாப் அணியும் எதிர்நோக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘நெஸ் வாடியா விவகாரம் குறித்து மும்பையில் நாளை நடக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். நிர்வாக கமிட்டி தான் இந்த பிரச்சினையை குறை தீர்ப்பு அதிகாரி டி.கே.ஜெயினின் விசாரணைக்கு கொண்டு செல்வதா அல்லது 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியிடம் ஒப்படைப்பதா என்று முடிவு செய்யும்.

பஞ்சாப் அணி இடைநீக்கம் செய்யப்படலாம் என்று பல யூகங்கள் வெளிவருகின்றன. இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் சட்ட நிபுணர் குழுவும், குறை தீர்ப்பு அதிகாரியும் இணைந்து முடிவு எடுக்க வேண்டியது அவசியமாகும்’ என்றார்.


Next Story