அடுத்த சுற்றை எட்டும் முனைப்பில் மும்பை அணி: மும்பை இந்தியன்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்


அடுத்த சுற்றை எட்டும் முனைப்பில் மும்பை அணி: மும்பை இந்தியன்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 1 May 2019 11:45 PM GMT (Updated: 1 May 2019 7:59 PM GMT)

மும்பை இந்தியன்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி மும்பையில் இன்று நடைபெற உள்ளது.

மும்பை,

பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி 7 வெற்றி, 5 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) உறுதி செய்து விடலாம். சொந்த ஊரில் நடக்கும் இன்றைய ஆட்டத்திலேயே பிளே-ஆப் சுற்றை எட்டிவிட வேண்டும் என்பதில் மும்பை வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் மும்பை அணி தோற்றாலும் அதில் ஹர்திக் பாண்ட்யா 34 பந்துகளில் 9 சிக்சருடன் 91 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக உள்ளதால் மும்பை அணி இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

ஐதராபாத் அணியை பொறுத்தவரை டேவிட் வார்னரும் (692 ரன்), ஜானி பேர்ஸ்டோவும் (445 ரன்) பேட்டிங்குக்கு முதுகெலும்பாக இருந்தனர். அந்த அணி 12 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதில் இவர்களின் பங்களிப்பே அதிகம். இருவரும் உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்காக தாயகம் திரும்பி விட்டனர். இதனால் ஐதராபாத் அணி பலவீனமடைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. தனது கடைசி இரு லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சிக்கலின்றி அடுத்த சுற்றை எட்ட முடியும் என்ற நெருக்கடியில் தவிக்கும் ஐதராபாத் அணி ஏற்கனவே மும்பையிடம் வெறும் 96 ரன்னில் சுருண்டு தோற்று இருந்தது. வார்னர் கிளம்பி விட்டதால், இப்போது பேட்டிங்கில் மனிஷ் பாண்டே, கேப்டன் வில்லியம்சன், விஜய் சங்கர், விருத்திமான் சஹா ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. வார்னருக்கு பதிலாக மார்ட்டின் கப்தில் களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.


Next Story