பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 12 May 2019 9:45 PM GMT (Updated: 12 May 2019 9:12 PM GMT)

இங்கிலாந்து–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்தது.

சவுதம்டன், 

இங்கிலாந்து–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 55 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்சருடன் 110 ரன்னும், கேப்டன் இயான் மோர்கன் 48 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 71 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஜாசன் ராய் 87 ரன்னும், பேர்ஸ்டோ 51 ரன்னும், ஜோரூட் 40 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ‌ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, யாசிர் ஷா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். பின்னர் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 361 ரன்களே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் 138 ரன்னும், பாபர் அஜாம் 51 ரன்னும், ஆசிப் அலி 51 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி, பிளங்கெட் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி போட்டி தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. லண்டனில் நடந்த முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி நாளை பிரிஸ்டலில் நடக்கிறது.


Next Story