3 நாடுகள் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி


3 நாடுகள் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி
x
தினத்தந்தி 16 May 2019 10:00 PM GMT (Updated: 16 May 2019 9:34 PM GMT)

3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டப்லின்,

வங்காளதேசம், அயர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் டப்லினில் நேற்று முன்தினம் நடந்த 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-அயர்லாந்து அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் 141 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 130 ரன்னும், கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு 106 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 94 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். வங்காளதேச அணி தரப்பில் அபு ஜெயத் 5 விக்கெட்டும், முகமது சைபுதீன் 2 விக்கெட்டும், ருபெல் ஹூசைன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 76 ரன்னும், தமிம் இக்பால் 57 ரன்னும், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 35 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். ஷகிப் அல்-ஹசன் 51 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். மக்முதுல்லா 35 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபுஜெயத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் வங்காளதேசம்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2 லீக் ஆட்டங்களிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி, வங்காளதேசத்திடம் தோல்வி கண்டது. அதற்கு பதிலடி கொடுக்க வெஸ்ட்இண்டீஸ் அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Next Story