உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வஹாப், ஆசிப் அலி, முகமது அமிர் சேர்ப்பு


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வஹாப், ஆசிப் அலி, முகமது அமிர் சேர்ப்பு
x
தினத்தந்தி 20 May 2019 11:30 PM GMT (Updated: 20 May 2019 10:09 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், ஆசிப் அலி, முகமது அமிர் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

லாகூர்,

10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் பட்டியலை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் ஒரு மாதம் முன்பே அறிவித்து விட்டன. அந்த உத்தேச வீரர்கள் பட்டியலில் வருகிற 23-ந் தேதி வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனுமதியுடன் மாற்றம் செய்யலாம்.

கடந்த வாரம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி 0-4 என்ற கணக்கில் மோசமான தோல்வி கண்டது. இது பாகிஸ்தான் அணியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் அந்த நாட்டு தேர்வு குழுவினர் மாற்றம் செய்துள்ளனர்.

33 வயது இடக்கை வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2 உலக கோப்பை போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்ட அவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடியது கிடையாது. வஹாப் ரியாஸ்சின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்த நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. பேட்ஸ்மேன் ஆசிப் அலி, மற்றொரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

புற்று நோய் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா நேற்று முன்தினம் மரணம் அடைந்த நிலையில் ஆசிப் அலி அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். உத்தேச அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான், ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப், தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் வருமாறு:-

சர்ப்ராஸ் அகமது (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), பஹர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அஜாம், ஹாரிஸ் சோகைல், ஆசிப் அலி, சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, முகமது அமிர், வஹாப் ரியாஸ், முகமது ஹஸ்னைன்.

வீரர்கள் மாற்றம் குறித்து பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் கருத்து தெரிவிக்கையில், ‘வஹாப் ரியாஸ் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அணிக்கு திரும்பி இருக்கிறார். எந்தவொரு திட்டம் தீட்டினாலும் அதில் அவசியம் ஏற்பட்டால் மறுஆய்வு செய்வதில் தவறில்லை. அணியின் தேவையில் நான் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். வஹாப் ரியாஸ் உத்தேச அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அதனால் அவருக்கு எப்பொழுதுமே வாய்ப்பு கிடைக்காது என்று அர்த்தமில்லை. அவர் முதலில் அணியில் சேர்க்கப்படாததற்கு ஒரு காரணம் இருந்து இருக்கும். ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்யும் திறமை காரணமாக வஹாப் ரியாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து ஆடுகளத்தை கணிப்பது கடினமானதாகும். எனவே எங்களது தேர்வை நாங்கள் மறுபரிசீலனை செய்து இருக்கிறோம். வஹாப் ரியாசை அச்சத்தின் காரணமாக அணியில் சேர்த்துள்ளோம் என்று நினைக்க வேண்டாம். அணியின் தேவையை கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நீக்கப்பட்டு இருக்கும் வீரர்களின் செயல்பாடு நன்றாக இல்லை என்று அர்த்தம் கிடையாது. எங்களை நம்பர் ஒன் அணியாக நான் பார்க்கிறேன். உலக கோப்பை போட்டிக்காக எல்லா அணிகளும் கடுமையாக தயாராகி இருக்கும். இருப்பினும் உலக கோப்பையை வெல்லும் திறன் பாகிஸ்தான் அணிக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.


Next Story