கிரிக்கெட்

‘கேப்டன் விராட்கோலிக்கு ஆதரவாக இருப்போம்’ - கங்குலி பேட்டி + "||" + We will support Captain Virat kohli - Ganguly Interview

‘கேப்டன் விராட்கோலிக்கு ஆதரவாக இருப்போம்’ - கங்குலி பேட்டி

‘கேப்டன் விராட்கோலிக்கு ஆதரவாக இருப்போம்’  - கங்குலி பேட்டி
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கங்குலி, எல்லா வகையிலும் கேப்டன் விராட்கோலிக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறினார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் அதிகாரி கோபால்சாமி அறிவித்தார். இதையடுத்து நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.


செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக மத்திய மந்திரி அனுராத் தாகூரின் தம்பியும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் துமாலும், இணைச்செயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜூம், துணைத் தலைவராக உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் மஹிம் வர்மாவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதை தொடர்ந்து கடந்த 33 மாதங்களாக இந்திய கிரிக்கெட் வாரிய நடவடிக்கைகளை கவனித்து வந்த வினோத்ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டியின் பதவி காலம் முடிவுக்கு வந்தது.

புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் 47 வயதான கங்குலி இந்திய அணிக்காக 113 டெஸ்ட் போட்டியிலும், 311 ஒருநாள் போட்டியிலும் விளையாடி இருக்கிறார். ஆக்ரோஷமான கேப்டன் என்று வர்ணிக்கப்பட்ட கங்குலி இந்திய அணியால் வெளிநாட்டு மண்ணில் வெற்றியை குவிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தவர். இந்திய கிரிக்கெட் அணி சூதாட்ட சர்ச்சையை சந்தித்த சமயத்தில் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வெற்றிகரமாக பயணிக்க வைத்த அவர் 2003-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜொலித்த கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அவதாரத்தில் வெற்றிகளை பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. லோதா கமிட்டி சிபாரிசின் படி மாநில மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. இதன்படி கங்குலியால் 9 மாதம் தான் தலைவராக நீடிக்க முடியும். பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பதவி வகித்த கங்குலியின் தலைவர் பதவி அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைவதால் அப்போது புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். கங்குலிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தலைவராக பொறுப்பேற்ற பிறகு கங்குலி அளித்த முதல் பேட்டியில் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பை ஏற்று இருப்பது மிகப்பெரிய கவுரவம். இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தொடக்கமாகும். இது இளம் நிர்வாகிகள் படையாகும். இந்திய கிரிக்கெட் வாரியத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனெனில் கடந்த 3 ஆண்டுகளாக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் எதுவும் நடக்கவில்லை. எனவே இந்த காலங்களில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது. இவை எல்லாவற்றையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியது போல் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்வேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நம்பகத்தன்மை விஷயத்திலும், ஊழலற்ற நிர்வாகத்திலும் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்ற நிலை தொடரும்.

இந்திய கிரிக்கெட்டின் மிகவும் முக்கியமான நபர் கேப்டன் விராட்கோலி. அவர் சொல்லும் விஷயத்தை கவனத்தில் எடுத்து கொள்வோம். நான் விராட் கோலியுடன் நாளை (அதாவது இன்று) பேசுவேன். அவர் என்ன கேட்டாலும், முடிந்தவரை எல்லா வகையிலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். இந்திய கிரிக்கெட் அணியை உலகிலேயே சிறந்த அணியாக உருவாக்க விராட்கோலி விரும்புகிறார். உள்ளபடியே சொல்ல வேண்டுமானால் கடந்த 3-4 ஆண்டுகளாக இந்திய அணி விளையாடி வரும் விதத்தை பார்க்கையில் அதனை சிறந்த அணி என்று சொல்லலாம்.

தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணி நிர்வாகத்தினருடன் எல்லா விஷயங்களிலும் முறையாக கலந்து பேசி முடிவுகள் எடுக்கப்படும். அவர்களின் பணியை எளிதாக்கவே நாங்கள் இந்த பதவிக்கு வந்து இருக்கிறோம். அவர்களின் பணியை கடினமாக்க மாட்டோம். ஆட்டத்திறன் அடிப்படையில் அனைத்தும் முடிவு செய்யப்படும். திறமை தான் மிகவும் முக்கியம். அது தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். நான் கேப்டனாக இருந்து இருப்பதால் விராட்கோலியின் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடியும். இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதை உண்டு. கருத்துகளுக்கும், விவாதங்களுக்கும் இடம் இருக்கும். ஆட்டத்துக்கு எது நல்லதோ? அதனை நாங்கள் செய்வோம்.

2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணி ஐ.சி.சி. போட்டியில் கோப்பையை வெல்லவில்லை என்று நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் எல்லா நேரங்களிலும் உலக கோப்பையை வெல்வது என்பது முடியாத காரியம். இந்திய கிரிக்கெட் முன்னேற்ற பாதையில் செல்வதை உறுதி செய்வோம்.

ஒவ்வொரு வடிவிலான போட்டிக்கும் தனித்தனி கேப்டன் கொண்டு வர வேண்டும் என்ற கேள்வி தற்போது எழுவதாக நான் நினைக்கவில்லை. தற்போது இந்திய அணி வெற்றிப்பாதையில் பயணிக்கிறது. உலகின் சிறந்த அணியாக இந்தியா திகழ்கிறது. டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று விராட்கோலி கூறியிருக்கிறார். நம்மிடம் நிறைய மாநிலங்களும், நிறைய மைதானங்களும் உள்ளன. எனவே இது குறித்து அவருடன் நாங்கள் பேசுவோம். அவர் விரும்பியபடி செய்யலாம்.

வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராடி வருவதால் அந்த அணியின் இந்திய பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று கேட்கிறீர்கள். இது அவர்களது உள்விவகாரம். ஆனால் கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை காண நேரில் வருவதாக வங்காளதேச பிரதமர் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அப்படி இருக்கையில் அந்த நாட்டு அணி எப்படி வராமல் இருக்கும். இவ்வாறு கங்குலி கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி கடந்த 33 மாதங்களாக இந்திய கிரிக்கெட் வாரிய பணிகளை கவனித்த நிர்வாக கமிட்டியின் தலைவர் வினோத்ராய், உறுப்பினர் டயானா எடுல்ஜி ஆகியோருக்கு தலா ரூ.3½ கோடி வீதம் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் முன்பு இதே கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்த ராமச்சந்திர குஹா, விக்ரம் லிமாயே ஆகியோர் தங்களுக்கு எந்த ஊதியமும் வேண்டாம் என்று மறுத்து விட்டனர். 


 ‘சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெறமாட்டார்கள்’ - டோனி குறித்து கங்குலி கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான 38 வயது டோனி உலக கோப்பை தொடருக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை. வெஸ்ட்இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் இருந்து தானாக விலகி விட்டார். அவர் தொடர்ந்து விளையாடுவாரா? அல்லது ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. டோனியின் எதிர்காலம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவர் கங்குலியிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

டோனியின் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே அதனை நாங்கள் பார்த்து கொள்வோம். தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் டோனியும் ஒருவர். டோனியை நாம் பெற்று இருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமையாகும். தனது சாதனைகள் மூலம் இந்தியாவை பெருமைப்பட வைத்து இருக்கிறார். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு செய்து இருக்கும் சாதனைகளை பட்டியலிட்டு பார்த்தால் நீங்கள் கூட ஆச்சரியப்படுவீர்கள். நான் பதவியில் இருக்கும் வரை அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும். அதில் மாற்றம் எதுவும் இருக்காது. டோனியிடம் நான் இன்னும் பேசவில்லை. விரைவில் அவருடன் பேசுவேன். நான் விளையாடிய காலத்தில் என்னை அணியில் இருந்து நீக்கிய போது இனி கங்குலி அவ்வளவு தான். மீண்டு வரமாட்டார் என்று விமர்சித்தார்கள். ஆனால் நான் மறுபடியும் அணிக்கு திரும்பி அதன் பிறகு 4 ஆண்டுகள் விளையாடினேன். சாம்பியன்கள் விரைவில் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து கொள்ளமாட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.