இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் - குறைந்தபட்ச விலை ரூ.1,200


இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் - குறைந்தபட்ச விலை ரூ.1,200
x
தினத்தந்தி 7 Dec 2019 12:26 AM GMT (Updated: 2019-12-07T05:56:40+05:30)

சென்னையில் நடைபெறும் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

சென்னை,

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 15-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

சேப்பாக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். விராட்கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்க இருப்பதால் இந்த போட்டியை நேரில் காண ரசிகர்கள் மத்தியில் இப்போதே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலக கவுண்ட்டர்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்துக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,200 ஆகும். சொகுசு வசதி உடைய அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.12 ஆயிரமாகும். ரூ.2,400, ரூ.4000, ரூ.4,800, ரூ.6,500, ரூ.8 ஆயிரம் ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் விற்பனை செய்யப்படமாட்டாது.

சென்னை ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகளை www.paytm.com மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்-லைன் மூலம் பெறலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.


Next Story