இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது


இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 19 Jan 2020 12:24 AM GMT (Updated: 19 Jan 2020 12:24 AM GMT)

தொடரை வெல்வது யார்? என்பதை நிர்ணயிக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது.

பெங்களூரு,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் இடையே மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

முந்தைய ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்து இந்தியா தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இழந்தது. அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இறுதி வரை எல்லா துறையிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோருக்கு கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் பயப்படும் வகையில் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரும் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. இருப்பினும் இருவரும் களம் இறங்குவது குறித்து இன்று தான் முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முதல் போட்டியில் ஹெல்மெட்டில் பந்து தாக்கிய பிறகு களம் இறங்காத விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் இந்த போட்டியிலும் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நன்றாக இருந்தது. பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே தவிர எல்லோரும் சரியான பங்களிப்பை அளித்தனர். ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன் ஆகியோர் நிலைத்து நின்று ஆடினார்கள். ஆனால் முதல் போட்டியில் சதம் அடித்த டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. கடந்த ஆட்டத்தில் மிடில் ஆர்டரில் ஏற்பட்ட விக்கெட் சரிவை சரி செய்து ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிக்கும்.

பெங்களூரு மைதானத்தில் கடைசியாக இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் இரு அணிகளும் 300 ரன்களுக்கு மேல் குவித்தன. எனவே இந்த போட்டியிலும் ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம். இரவில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இதனால் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங் செய்யவே விரும்பும். இரவில் பனியின் ஈரம் இருக்கும் என்பதால் பந்து வீசுவதற்கு கடினமாக இருக்கும்.

இரு அணிகளும் போட்டி தொடரை சொந்தமாக்க கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்) ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் அல்லது ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.


Next Story