ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 6 March 2020 12:13 AM GMT (Updated: 6 March 2020 12:13 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

புளோம்பாண்டீன்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. பார்ல் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 271 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச், டார்சி ஷார்ட் தலா 69 ரன்கள் எடுத்தனர்.

தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிகிடி 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். நிகிடியின் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும். அத்துடன் அவர் 3-வது விக்கெட்டை வீழ்த்திய போது ஒருநாள் போட்டியில் 50 விக்கெட்டுகளை (26 ஆட்டம்) கடந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை நிகிடி பெற்றார்.

பின்னர் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான குயின்டான் டி காக் ரன் எதுவும் எடுக்காமலும், அடுத்து வந்த ஜோன் ஸ்முட்ஸ் 41 ரன்னிலும், கைல் வெர்ரினி 3 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஹென்ரிச் கிளாசென் தன்பங்குக்கு 51 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

இதன் பின்னர் டேவிட் மில்லர், தொடக்க ஆட்டக்காரர் ஜெனிமான் மலானுடன் இணைந்தார். நிலைத்து நின்று ஆடிய ஜெனிமான் மலான் 124 பந்துகளில் சதத்தை எட்டினார். 2-வது போட்டியில் ஆடிய அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். 48.3 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மலான் 139 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 129 ரன்னும், மில்லர் 37 ரன்னும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 102-வது ஒருநாள் போட்டியில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி அதில் பெற்ற 50-வது வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி ஒருநாள் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடந்த 12 மாதங்களில் தென்ஆப்பிரிக்க அணி வென்ற முதல் தொடர் இதுவாகும். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story