தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் பாண்ட்யா, தவான்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் பாண்ட்யா, தவான்
x
தினத்தந்தி 9 March 2020 2:06 AM GMT (Updated: 9 March 2020 2:06 AM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா, தவான் திரும்பியுள்ளனர்.

ஆமதாபாத், 

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 12-ந்தேதி தர்மசாலாவில் நடக்கிறது. 2-வது ஆட்டம் 15-ந்தேதி லக்னோவிலும், 3-வது ஆட்டம் 18-ந்தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று புதிய தேர்வு குழு தலைவர் சுனில் ஜோஷி தலைமையில் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது. முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, மும்பையில் நடந்த உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி ரன்வேட்டையோடு தனது உடல்தகுதியை நிரூபித்தார். எதிர்பார்த்தது போலவே அவர் அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார். 26 வயதான பாண்ட்யா கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட ஷிகர் தவான், குடலிறக்க பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஆகியோரும் உடல்தகுதியை எட்டி விட்டதால் அணிக்கு திரும்பியுள்ளனர். அதே சமயம் நியூசிலாந்து தொடரின் போது பின்னங்காலில் தசைப்பிடிப்பில் சிக்கிய துணை கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இந்த மாதத்தில் 35-வது வயதை எட்டும் கேதர் ஜாதவ், மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர், ஷிவம் துபே கழற்றி விடப்பட்டனர். இளம் வீரர்கள் பிரித்வி ஷா, சுப்மான் கில் ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story