ஐ.சி.சி. தரவரிசை முறையில் எனக்கு நம்பிக்கை கிடையாது: கம்பீர் கருத்து


ஐ.சி.சி. தரவரிசை முறையில் எனக்கு நம்பிக்கை கிடையாது: கம்பீர் கருத்து
x
தினத்தந்தி 11 May 2020 11:00 PM GMT (Updated: 11 May 2020 7:15 PM GMT)

ஐ.சி.சி. தரவரிசை முறையில் தனக்கு நம்பிக்கை கிடையாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் (ஐ.சி.சி.) போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியது. 42 மாதங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்த இந்திய அணி 3-வது இடத்துக்கு சறுக்கியது. நியூசிலாந்து அணி 2-வது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் ஐ.சி.சி.யின் தரவரிசை புள்ளி வழங்கும் முறையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து ஸ்டார் ஸ்போட்ர்ஸ் டெலிவிஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் கம்பீர் கூறியதாவது:-

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஐ.சி.சி. தரவரிசை மற்றும் புள்ளிகள் முறையில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகள் நடைமுறை மிகவும் மோசமானதாகும். உள்ளூரிலும், வெளியூரிலும் வெற்றி பெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரே மாதிரியான புள்ளிகள் தான் வழங்குகிறார்கள். இது அபத்தமானது.

கடந்த சில வருடங்களாக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சவால் நிறைந்த அணியாக விளங்கி வருகிறது. ஒட்டுமொத்தத்தில் பார்க்கையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தோல்வியை சந்தித்து இருக்க தான் செய்கிறது. ஆனால் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது. இதேபோல் வலுவான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இதனை மற்ற பல அணிகள் செய்ததில்லை.

என்னை பொறுத்தமட்டில் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும். எந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பர் ஒன் இடத்தை வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. வெளிநாட்டு மண்ணில், குறிப்பாக இந்திய துணை கண்டத்தில் ஆஸ்திரேலிய அணி பரிதாபத்தை சந்தித்தது.

இந்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதற்காக முன்கூட்டியே அங்கு சென்று இந்திய கிரிக்கெட் அணியை தனிமைப்படுத்தி கொண்டு தயாராக தயார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியதாகும். இது நல்ல அறிகுறியாகும். போட்டி தொடரை வெல்ல வேண்டியது முக்கியமானது தான் அதே நேரத்தில் இந்த போட்டி தொடர் வித்தியாசமானது. இந்த போட்டி தொடரால் இரு நாட்டு மக்களின் மனநிலையில் மாறுதல் ஏற்படும் என்று அவர் கூறினார்.

Next Story