மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி ஒத்தி வைப்பு - ஐசிசி


மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி ஒத்தி வைப்பு - ஐசிசி
x
தினத்தந்தி 12 May 2020 8:55 AM GMT (Updated: 12 May 2020 8:55 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களை ஐசிசி ஒத்திவைத்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் ஜூலை 3 முதல் 19 வரை மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டன. இதிலிருந்து 3 அணிகள் 2021-ல் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும்.

2021 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி, 2021 பிப்ரவரி 6 முதல் மார்ச் 7 வரை நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. கடந்த  ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அரசியல் காரணங்களால் நடைபெறவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகளைப் பகிர்ந்தளித்துள்ளது ஐசிசி. இதன்மூலமாக இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களை ஐசிசி ஒத்திவைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது ஐசிசி.

ஐ.சி.சி. தலைவர் கிறிஸ் டெட்லி கூறுகையில்,

தொடர்ச்சியான பயணக் கட்டுப்பாடுகள், உலகளாவிய நிலவும் சுகாதார கவலைகள் மற்றும் அரசு மற்றும் பொது சுகாதார அதிகார ஆலோசனையின் அறிவுறுத்தலின்படி, கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக வரவிருக்கும் இரண்டு தகுதி நிகழ்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதி மற்றும் யு 19 கிரிக்கெட் உலகக் கோப்பை 2022 க்கு ஐரோப்பா தகுதிபெற்றது ஆகிய இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன.

"இந்த கடினமான காலகட்டத்தில் எங்கள் முன்னுரிமை வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்தின் நல்வாழ்வைப் பாதுகாப்பதாகும், மேலும் நிகழ்வுகளை ஒத்திவைத்தல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவது தொடர்பாக முடிவுகளை எடுப்போம். உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story