ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ.4000 கோடி இழப்பு ஏற்படும் - சவுரவ் கங்குலி


ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ.4000 கோடி இழப்பு ஏற்படும் - சவுரவ் கங்குலி
x
தினத்தந்தி 15 May 2020 10:16 AM GMT (Updated: 15 May 2020 10:16 AM GMT)

ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ. 4000 கோடி இழப்பு ஏற்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் வர முடியாத அளவுக்கு தற்போது பயணக்கட்டுப்பாடுகள் உள்ளன.  இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஐபிஎல் போட்டி, மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் நிலைமை குறித்து ஒரு பேட்டியில் சவுரவ் கங்குலி கூறியதாவது:

எங்களுடைய நிதி நிலைமையை நாங்கள் ஆராய வேண்டும். கைவசம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்த பிறகு ஒரு முடிவெடுக்கவேண்டும். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ. 4000 கோடி இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த இழப்பு மிகவும் பெரியது. ஐபிஎல் நடைபெறாவிட்டால் சம்பளத்தில் கை வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

காலி மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் அதன் ரசிகர்களின்  ஈர்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். 1999-ல் பாகிஸ்தானுக்கு ஒரு டெஸ்டில் கடைசி நாளன்று ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு குறைவாக இருந்தது. குறைவான ரசிகர்களைக் கொண்டு ஐபிஎல் போட்டி நடத்தினாலும் பல பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.

அக்டோபர் மாதத்தில் டி20 தொடருடன் இந்தியா சுற்றுப்பயணத்தைத் தொடங்கவும், நவம்பர்-டிசம்பர் மாதங்களில் டி20  உலகக் கோப்பைக்குப் பிறகு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மையில், பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல், சுற்றுப்பயணத்தின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதற்கு முன்பு கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தும் காலத்திற்கு செல்ல இந்தியா தயாராக இருக்கும் என்றார்.

இந்தியா ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. வரையறுக்கப்பட்ட ஓவர் விளையாட்டுகள் இருக்கும், மேலும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் சுற்றுப்பயணத்தை நீட்டிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story