20 ஓவர் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பில்லை: மார்க் டெய்லர் கருத்து


20 ஓவர் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பில்லை: மார்க் டெய்லர் கருத்து
x
தினத்தந்தி 24 May 2020 11:47 PM GMT (Updated: 24 May 2020 11:47 PM GMT)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்ட காலத்தில் நடக்க வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் கூறியுள்ளார்.

மெல்போர்ன், 

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் நுழைய செப்டம்பர் மாதம் வரை தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்த உலக கோப்பை போட்டி நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் உலக கோப்பை விஷயத்தில் ஆகஸ்டு மாதம் வரை எந்த முடிவுக்கும் வரமாட்டோம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முன்பு கூறியிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய முன்னாள் இயக்குனருமான மார்க் டெய்லர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறாது என்றே நினைக்கிறேன். அதற்கு சாத்தியமில்லை என்பதே எனது பதில். வருகிற 28-ந்தேதி நடக்கும் ஐ.சி.சி. போர்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உலக கோப்பை போட்டி நடக்குமா நடக்காதா என்பது குறித்து தெளிவான முடிவு எடுக்கப்பட வேண்டும். அதை செய்தால் நன்றாக இருக்கும். அப்போது தான் இங்கு உட்கார்ந்து கொண்டு நடக்கலாம், வாய்ப்புண்டு என்று கூறிக்கொண்டு இருப்பதை நிறுத்த முடியும். ஒவ்வொருவரும் அடுத்தகட்ட திட்டமிடலில் இறங்க முடியும்’ என்றார்.

உலக கோப்பை போட்டி ஒத்திவைக்கப்பட்டால் அந்த சமயத்தில் பணம் கொழிக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முனைப்பு காட்டுகிறது. ஆனால் உலக கோப்பை குறித்து உறுதியான அறிவிப்பு வெளியான பிறகே ஐ.பி.எல். தேதியை இறுதி செய்ய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது.

இது பற்றிய கேள்விக்கு மார்க் டெய்லர் பதில் அளிக்கையில், ‘இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பும். எனவே ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டால் தங்கள் நாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு சென்று விளையாட வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா ஆர்வம் காட்டலாம். ஏனெனில் ஆண்டின் இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு வந்து விளையாட வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதியுடன் உள்ளது. அதிக வருவாய் தரக்கூடிய மிகப்பெரிய தொடராக இது இருக்கும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடருகின்றன’ என்றார்.


Next Story