2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணியில் கங்குலியை கவர்ந்த 3 வீரர்கள்


2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணியில் கங்குலியை கவர்ந்த 3 வீரர்கள்
x
தினத்தந்தி 5 July 2020 10:45 PM GMT (Updated: 5 July 2020 8:20 PM GMT)

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் தன்னை கவர்ந்த 3 வீரர்களின் பெயர் விவரத்தை கங்குலி வெளியிட்டுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி, சக வீரர் மயங்க் அகர்வாலுடன் கலந்துரையாடினார். அப்போது ‘டுவிட்டர்’ மூலம் ரசிகர்கள் அனுப்பிய கேள்விகளை அகர்வால் கேட்க, அதற்கு கங்குலி சுவைப்பட பதில் அளித்தார்.

கங்குலி தலைமையிலான இந்திய அணி 2003-ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அப்போதைய அணிக்கு 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பங்கேற்று அரைஇறுதியுடன் வெளியேறிய இந்திய அணியில் இருந்து 3 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்று கங்குலியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா’ ஆகியோரின் பெயர்களை பட்டியலிட்டார். ‘பும்ரா தரமான ஒரு வேகப்பந்து வீச்சாளர். அந்த உலக கோப்பை போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்ததால் பும்ராவின் பந்து வீச்சு முக்கியத்துவம் பெறும். விராட் கோலி மிடில் வரிசை பேட்டிங்கில் வலு சேர்ப்பார். ரோகித் சர்மா தொடக்க வீரராகவும், நான் 3-வது வரிசையிலும் இறங்குவேன். ஷேவாக் (2003-ம் ஆண்டு உலககோப்பையில் தெண்டுல்கருடன் ஷேவாக் தான் தொடக்க வீரராக ஆடினார்) நான் பேசுவதை கேட்பார் என்று நினைக்கிறேன். அனேகமாக எனக்கு நாளை போன் செய்தாலும் செய்வார். இவர்களை தவிர்த்து 4-வது ஒரு வாய்ப்பு அளித்தால் டோனியையும் தேர்வு செய்வேன்’ என்று குறிப்பிட்டார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, ‘20 ஓவர் கிரிக்கெட் மிகவும் முக்கியமானது. எனது காலத்தில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருந்தால் எனது ஆட்டபாணியை மாற்றியிருப்பேன். உற்சாகமாக, துடிப்புடன் விளையாட வேண்டும், தொடர்ந்து பந்தை நொறுக்க வேண்டும் இது தான் இந்த வடிவிலான போட்டியின் தாரக மந்திரம்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் நான் 5 ஆண்டுகள் விளையாடி இருந்தாலும், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதை விரும்பியிருப்பேன். நிச்சயம் அனுபவித்து, ரசித்து விளையாடி இருப்பேன்’ என்றார்.

2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2002-ம் ஆண்டு இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் தொடர் இறுதி ஆட்டத்தில் 326 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மகுடம் சூடியது இவற்றில் எதை உயரியதாக நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, ‘இரண்டு போட்டிக்குமே எனது மனதில் சிறப்பு வாய்ந்த இடம் உண்டு. நான் பங்கெடுத்த ஆட்டங்களில் மிகச்சிறந்த ஒன்றாக நாட்வெஸ்ட் போட்டியை வர்ணிப்பேன். பரபரப்பான சூழலில் இது போன்று திரிலிங்கான வெற்றியை ருசிக்கும் போது இன்னும் அதிகமாக (லார்ட்ஸ் பால்கனியில் சட்டையை சுழற்றி கொண்டாட்டம்) கூட கொண்டாட தோன்றும். அதுவும் இங்கிலாந்து மண்ணில் சனிக்கிழமை அன்று லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெறுவது என்பது அற்புதமான உணர்வை கொடுக்கும்.

உலக கோப்பை கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் இறுதிப்போட்டியை எட்டியது சிறப்பான விஷயம். கடைசியில் வலுவான அணியால் (ஆஸ்திரேலியா) தோற்கடிக்கப்பட்டோம். இந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவை தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தோம். அந்த வகையில் இது சிறந்த சாதனை தான்’ என்றார்.

Next Story