ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 9 July 2020 10:00 PM GMT (Updated: 9 July 2020 7:13 PM GMT)

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

புதுடெல்லி,

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த போட்டியை நடத்தும் உரிமையை பெற்று இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு விட்டுக்கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக அடுத்த ஆசிய போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள இலங்கையிடம் இருந்து அந்த உரிமையை பெற்று இருப்பதாக செய்திகள் வெளியாயின. கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் இந்த போட்டியை நடத்தலாமா? என்பது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி ‘செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது’ என்று நேற்று முன்தினம் தெரிவித்தார். கங்குலியின் இந்த அறிவிப்பால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்திக்குள்ளானாது. ‘கங்குலியின் வார்த்தையை பொருட்படுத்த வேண்டாம். அவரது கருத்து ஆசிய கோப்பை போட்டி விஷயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தான் முடிவு செய்ய முடியும்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மீடியா இயக்குனர் சமியுல் ஹசன் காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்ட அதிகாரபூர்வ பதிவில் ‘கொரோனாவின் தாக்கம் குறித்து மிகவும் கவனமாக பரிசீலனை செய்த பிறகு வருகிற செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை போட்டியை தள்ளிவைப்பது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் செயற்குழு முடிவு செய்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2021) ஜூன் மாதம் வரை இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Story