2008-ம் ஆண்டில் நடந்த சிட்னி டெஸ்டில் இந்தியாவுக்கு இரண்டு தவறான தீர்ப்பு வழங்கினேன் நடுவர் பக்னர் ஒப்புதல்


2008-ம் ஆண்டில் நடந்த சிட்னி டெஸ்டில் இந்தியாவுக்கு இரண்டு தவறான தீர்ப்பு வழங்கினேன் நடுவர் பக்னர் ஒப்புதல்
x
தினத்தந்தி 19 July 2020 10:30 PM GMT (Updated: 19 July 2020 8:17 PM GMT)

2008-ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் இந்தியாவுக்கு இரண்டு தவறான தீர்ப்பு வழங்கியதாக முன்னாள் நடுவர் பக்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.

மும்பை,

இந்திய அணி 2008-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த டெஸ்டில் தான் ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலிய வீரர் சைமன்ட்சை குரங்கு என்று திட்டியதாக சர்ச்சை வெடித்தது. அத்துடன் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நடுவர்களின் ஒருதலைபட்சமான பல முடிவுகளால் தடுக்கப்பட்டது. இந்த டெஸ்டில் நடுவராக பணியாற்றியவர்களில் ஒருவரான அனுபவம் வாய்ந்த ஸ்டீவ் பக்னர் (வெஸ்ட் இண்டீஸ்) இந்தியாவுக்கு இரண்டு தவறான தீர்ப்பு வழங்கியதாக இப்போது ஒப்புக் கொண்டுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

2008-ம் ஆண்டு சிட்னி டெஸ்டில் இந்திய அணிக்கு இரண்டு தவறான தீர்ப்புகளை வழங்கினேன். ஒன்று, இந்திய அணி சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்த போது எதிரணி பேட்ஸ்மேனை சதம் அடிக்க அனுமதிக்கும் வகையில் வழங்கிய தவறான தீர்ப்பு. மற்றொரு தவறு 5-வது நாளில் நிகழ்ந்தது. இதனால் ஆட்டமே இந்தியாவின் கையை விட்டு பறிபோனது. 5 நாட்களில் 2 தவறு தான். ஒரே டெஸ்டில் இரண்டு தவறான தீர்ப்பு வழங்கிய முதல் நடுவர் நானா?. ஆனாலும் அவ்விரு மோசமான முடிவுகளும் அடிக்கடி எனது மனதில் தோன்றி அச்சுறுத்தும்.

நான் ஏன் தவறிழைத்தேன் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதை சாக்குபோக்காக சொல்லவில்லை. ஆனால் அந்த சமயத்தில் தரையை நோக்கி காற்று பலமாக வீசியது. காற்றின் இரைச்சலோடு பந்து பேட்டில் பட்டதா? இல்லையா? என்பது தெளிவாக உணர முடியவில்லை. வர்ணனையாளர்கள் ஸ்டம்பு மீது உள்ள மைக் மூலம் சத்தத்தை கேட்பார்கள். ஆனால் நடுவரின் நிலைமை அப்படி இல்லை. இத்தகைய விஷயங்கள் பார்வையாளர்களுக்கு தெரியாது.

இவ்வாறு பக்னர் கூறினார்.

இந்த டெஸ்டில் முதல்இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்களுடன் தத்தளித்தது. அப்போது சைமன்ட்ஸ் 30 ரன்னில் இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். ஆனால் நடுவர் பக்னர், பந்து பேட்டில் உரசவில்லை என்று கூறி விரலை உயர்த்த மறுத்தார். டி.வி. ரீப்ளேயில் பந்து பேட்டின் விளிம்பில் உரசியது தெரிந்தது. அந்த சமயம் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நடுவரின் கருணையால் கண்டம் தப்பிய சைமண்ட்ஸ் 162 ரன்கள் குவித்ததோடு தங்கள் அணி 463 ரன்களை எட்டுவதற்கும் வழிவகுத்தார். இந்திய அணியும் முதல் இன்னிங்சில் 532 ரன்கள் குவித்தது.

பிறகு 5-வது நாளில் இந்திய அணிக்கு 72 ஓவர்களில் 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டிரா செய்யும் முனைப்புடன் ஆடிய இந்திய அணி 33 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது, ராகுல் டிராவிட்டுக்கு (36 ரன்) தவறான தீர்ப்பை பக்னர் வழங்கினார். அதாவது பேட்டில் படாமல் காலுறையில் பட்டு பிடிக்கப்பட்ட பந்துக்கு கேட்ச் என்று அறிவித்தார். கடைசி வரை போராடிய இந்திய அணி 6 நிமிடம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் 210 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அந்த டெஸ்டில் தோல்வியை தழுவியது.

Next Story