குற்றவாளிகள் தப்பி விடக் கூடாது: சுரேஷ் ரெய்னா கோரிக்கை


குற்றவாளிகள் தப்பி விடக் கூடாது:  சுரேஷ் ரெய்னா கோரிக்கை
x
தினத்தந்தி 1 Sep 2020 7:44 AM GMT (Updated: 1 Sep 2020 7:44 AM GMT)

தனது உறவினர்கள் மீது கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல் குறித்து சுரேஷ் ரெய்னா முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

லக்னோ,

கடந்த மாதம் 20-ந் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் வீடு புகுந்து கொள்ளையர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் இறந்து விட்டார். அவரது குடும்பத்தினர் 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. 

எனினும், அணி நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சுரேஷ் ரெய்னா போட்டித்தொடரில் இருந்து விலகியதாகவும் ஒரு தகவல் வெளியானது. இது குறித்து எந்த தகவலையும் சுரேஷ் ரெய்னா தரப்பு வெளியிடவில்லை.  இந்த நிலையில்,   தனது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து டுவிட்டரில் எழுதியுள்ள ரெய்னா, பஞ்சாப் காவல்துறைக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாப்பில் என் குடும்பத்துக்கு நேர்ந்தது  கொடூரமானது. என் மாமா படுகொலை செய்யப்பட்டுள்ளார். என் அத்தையும் சகோதரர்களும் பலமாகக் காயமடைந்துள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக உயிருக்குப் போராடிய என் சகோதரரும் நேற்றிரவு மரணம் அடைந்துள்ளார். என் அத்தை இன்னும் உயிருக்குப் போராடி வருகிறார். உயிா் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.

அன்றிரவு என்ன நடந்தது, யார் செய்தார்கள் என்று இன்று வரை எங்களுக்குத் தெரியவில்லை. இந்த வழக்கைக் கவனிக்குமாறு பஞ்சாப் காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறேன். இந்தக் கொடுமையான செயலைச் செய்தவர்கள் யார் என்பதாவது எங்களுக்குத் தெரிய வேண்டும். அந்தக் குற்றவாளிகள் மேலும் குற்றங்கள் செய்யாதவாறு தடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள ரெய்னா, பஞ்சப் முதல் மந்திரியையும் டேக் செய்துள்ளார்.


Next Story