நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி மழையால் ரத்து


நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி மழையால் ரத்து
x
தினத்தந்தி 30 Nov 2020 11:30 PM GMT (Updated: 30 Nov 2020 11:30 PM GMT)

நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

மவுன்ட் மாங்கானு, 

நியூசிலாந்துக்கு சென்று இருக்கும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. 

போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. நேற்றைய ஆட்டத்தில் டிம் சவுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்ததால் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை மிட்செல் சான்ட்னெர் கவனித்தார். இதன்படி முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது தொடக்க ஆட்டக்காரர் ஆந்த்ரே பிளெட்சர் 4 ரன்னுடனும், கைல் மேயர்ஸ் 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். முன்னதாக மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரன்டன் கிங் 11 ரன்னில் பெர்குசன் பந்து வீச்சில் ஜேம்ஸ் நீஷத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மழை பலமாக கொட்டியதால் போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். 

ஏற்கனவே முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்த நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தொடர்நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

Next Story