தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து
x
தினத்தந்தி 3 Dec 2020 12:25 AM GMT (Updated: 3 Dec 2020 12:25 AM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தொடரை முழுமையாக வென்றது.

கேப்டவுன், 

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பிளிஸ்சிஸ் (52 ரன்), வான்டெர் துஸ்சென் (74 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 67 ரன்னும் (46 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), டேவிட் மலான் 99 ரன்னும் (47 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்த தொடர் முடிவின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 915 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் அதிக புள்ளிகள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை டேவிட் மலான் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 900 புள்ளிகள் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

Next Story