இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்


பயிற்சியில் இந்திய கேப்டன் விராட்கோலி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
x
பயிற்சியில் இந்திய கேப்டன் விராட்கோலி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
தினத்தந்தி 3 March 2021 10:38 PM GMT (Updated: 3 March 2021 10:38 PM GMT)

இந்தியா-இ்ங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தொடரை வசப்படுத்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் உத்வேகத்துடன் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

கடைசி டெஸ்ட்
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 3-வது பகல்-இரவு டெஸ்டில் (பிங்க் பந்து டெஸ்ட்) இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இதையடுத்து இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே ஆமதாபாத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.பிங்க் பந்து டெஸ்ட் 2 நாட்களுக்குள் முடிந்தது சர்ச்சையை கிளப்பியது. முழுக்க முழுக்க சுழலுக்கு ஒத்துழைத்த இந்த ஆடுகளம் தரமானது அல்ல என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கூப்பாடு 
போட்டனர். ஆனாலும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையிலேயே தயாராகி உள்ளது. ஆனால் முந்தைய டெஸ்ட் போன்று பேட்டிங்குக்கு ரொம்ப கடினமாக இருக்காது. இது சிவப்பு நிற பந்து டெஸ்ட் என்பதால் கணிசமாக ரன்களும் சேர்க்க முடியும்.

உலக சாம்பியன்ஷிப்...
இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ள இந்திய அணிக்கு இன்னொரு வகையிலும் இந்த டெஸ்ட் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. லண்டனில் ஜூன் மாதம் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது டிராவாவது காண வேண்டும். அப்போது தான் இறுதி சுற்றில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு வேளை இந்திய அணி இந்த போட்டியில் தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறி விடும்.

கடந்த டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் அக்‌ஷர் பட்டேலும், அஸ்வினும் இங்கிலாந்தை மிரட்டினர். இவர்கள் இருவரும் சேர்ந்து 19 விக்கெட்டுகளை அறுவடை செய்தனர். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் வெறும் 81 ரன்னில் சுருண்டது. இன்றைய டெஸ்டிலும் இவர்களின் சுழல் ஜாலத்தை தான் அணி நி்ாவாகம் எதிர்பார்க்கிறது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் இடம் பெற வாய்ப்புள்ளது.

சாதனையை நோக்கி கோலி
பேட்டிங்கை பொறுத்தவரை ரோகித் சர்மா (சதம் உள்பட 296 ரன்) சிறப்பாக விளையாடி வருகிறார். மற்றவர்களின் பேட்டிங் அவ்வப்போது நன்றாக இருக்கிறது. ரோகித், புஜாரா, கேப்டன் விராட்கோலி, துணை கேப்டன் ரஹானே ஒருசேர நிலைத்து நின்று ஆடிவிட்டால் போதும். எதிரணியை துவம்சம் செய்து விடலாம். ஓராண்டுக்கு மேலாக சதம் அடிக்காமல் உள்ள கோலி அந்த ஏக்கத்தை தணிப்பாரா? என்றும் ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி ஆடும் 60-வது டெஸ்ட் இதுவாகும். இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்திய டோனியின் சாதனையை (60 டெஸ்ட்) கோலி சமன் செய்கிறார்.

ஜோ ரூட் வேண்டுகோள்
இங்கிலாந்து அணி 3-வது டெஸ்டில் இந்திய சுழல் தாக்குதலுக்கு சமாளிக்க முடியாமல் ஒரேயடியாக அடிபணிந்தது. அத்துடன் சுழலுக்கு ஏற்ற ஆடுகளத்தில் இந்தியா 3 சுழற்பந்து வீச்சாளர்களை சேர்த்த நிலையில் அந்த அணி ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் ஆடியதும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த தவறை உணர்ந்துள்ள இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இன்றைய டெஸ்டில் 2-வது சுழற்பந்து வீச்சாளராக டாம் பெஸ் விளையாடுவார் என்பதை சூசகமாக தெரிவித்தார்.

‘பார்ப்பதற்கு, கடந்த டெஸ்ட் போட்டிக்குரிய ஆடுகளம் போன்றே இந்த டெஸ்டுக்கான ஆடுகளமும் இருக்கிறது. இந்திய சுழற்பந்து வீச்சை அச்சமின்றி தைரியமாக எதிர்த்து ஆட வேண்டும், ஆடுகளத்தை பற்றி கவலைப்படாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று சக வீரர்களை கேட்டுக்கொண்டுள்ள ஜோ ரூட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமனில் முடித்தால் அது உன்னதமான சாதனையாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் ஜோ ரூட், ஜாக் கிராவ்லி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ஆனால் பென் 
ஸ்டோக்ஸ், ஆலி போப் ஆகியோரின் ஆட்டம் அந்த அணிக்கு கவலைக்குரியதாக இருக்கிறது. அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும்.

காலை 9.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சுப்மான் கில், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் அல்லது முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, டாம் சிப்லி, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், பென் போக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், டாம் பெஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் அல்லது ஸ்டூவர்ட் பிராட்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story