கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது எனக்கு கொரோனா என தெரிந்ததும் மனமுடைந்து போனேன்: நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்ட் + "||" + IPL 2021: KKR and New Zealand batsman Tim Seifert in tears as he recalls Covid-19 ordeal in India

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது எனக்கு கொரோனா என தெரிந்ததும் மனமுடைந்து போனேன்: நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்ட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது எனக்கு கொரோனா என தெரிந்ததும் மனமுடைந்து போனேன்: நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்ட்
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது தனக்கு கொரோனா என்று அறிந்ததும் மனமுடைந்து போனதாக நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்ட் கண்ணீர் மல்க கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொரோனா

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது மொத்தம் 4 அணிகளில் கொரோனா பரவியதையடுத்து கடந்த 4-ந்தேதி இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மட்டும் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், பிரசித் கிருஷ்ணா (3 பேரும் இந்தியர்), விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட் (நியூசிலாந்து) ஆகியோர் கொரோனாவில் சிக்கினர்.

டிம் செய்பெர்ட்டை பொறுத்தவரை நாடு திரும்புவதற்கு முன்பாக நடத்தப்பட்ட இரண்டுகட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து அவர் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை தவிர்த்து மற்ற நியூசிலாந்து வீரர்கள் சொந்த நாட்டுக்கு சென்றனர்.

ஐ.பி.எல். தள்ளிவைக்கப்பட்ட பிறகு இரண்டு வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்த டிம் செய்பெர்ட் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்ததும் சில தினங்களுக்கு முன்பு தாயகம் திரும்பினார். தற்போது ஆக்லாந்தில் உள்ள ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். தனிமைப்படுத்துல் நடைமுறை முடிந்ததும் வீட்டுக்கு செல்வார்.

கண் கலங்கிய செய்பெர்ட்

இந்த நிலையில் செய்பெர்ட் அங்கிருந்து காணொலி மூலம் தனது கொரோனா அனுபவங்களை நேற்று நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் உணர்ச்சி வசப்பட்டு சில வினாடிகள் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவர் பேட்டியின் போது கூறியதாவது:-

அந்த சமயத்தில் எனக்கு லேசான இருமல் இருந்தது. அது ஆஸ்துமா பிரச்சினை என்று நினைத்தேன். எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அணி நிர்வாகி கூறிய போது, மனமுடைந்து போய் விட்டேன். அடுத்த நிமிடமே அது கடினமான நேரமாக மாறியது. உலகமே கொஞ்சம் நின்று விட்டதாக உணர்ந்தேன். அடுத்து என்ன? என்பதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. பயம் தொற்றிக் கொண்டது. ஏற்கனவே கொரோனா உயிரிழப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற கடினமான தகவல்களை கேள்விப்பட்ட நிலையில், நாமும் அந்த நிலைக்கு சென்று விடுவோமோ என்று அச்சமடைந்தேன். மிகவும் மோசமான நாள் அது.

ஐ.பி.எல்.-ல் ஆடிய எல்லோரும் தாயகம் திரும்பிய நிலையில் வெளிநாட்டு வீரர்களில் நான் மட்டும் இந்தியாவில் தவித்தேன். அதுவே என்னை மேலும் வேதனைக்குள்ளாக்கியது. சில நாட்களுக்கு பிறகு பதற்றமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் எல்லாம் சரியாகி விடும் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு நம்பிக்கையான விஷயங்களை நினைக்கத் தொடங்கினேன். அடுத்த இரு மாதங்களில் திருமணம் நடக்கப்போகிறது என்பதை நினைத்து பரவசத்திற்குள்ளானேன். நேர்மறையான எண்ணங்கள் வந்ததும் கடினமான நேரங்கள் காணாமல் போய் விட்டன. எனது வருங்கால மனைவி, நான் கொஞ்சம் சீக்கிரமாகவே தாயகம் வந்து விட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இனி திருமண ஏற்பாடுகளுக்கு உதவிகரமாக இருக்க முடியும்.

மெக்கல்லம், பிளமிங்குக்கு நன்றி

நான் கொரோனாவில் இருந்து சீக்கிரம் மீள்வதற்கு பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்தை சேர்ந்த கொல்கத்தா அணி பயிற்சியாளர்), ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்தை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர்) ஆகியோர் மிகவும் உதவிகரமாக இருந்தனர். அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு பேசி பயத்தை போக்கினர். மனதுக்குள் போட்டு குழப்பிய எல்லா கடினமான விஷயங்களையும் எளிதாக்கினர். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இதே போல் கொல்கத்தா மற்றும் சென்னை அணி நி்ாவாகத்தினரும் எனக்கு ஆதரவாக இருந்து நம்பிக்கை கொடுத்தனர்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிக்காக உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் சிறந்த முறையில் இருந்தது. அதில் பாதுகாப்புடன் இருந்ததாகவே உணர்ந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

26 வயதான செய்பெர்ட் முதல்முறையாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்த சீசனில் கொல்கத்தா அணி ஆடிய 7 ஆட்டங்களில் ஒன்றில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.