தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்குமா? - விராட் கோலி பதில்


தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்குமா? - விராட் கோலி பதில்
x
தினத்தந்தி 2 Dec 2021 11:11 PM GMT (Updated: 2 Dec 2021 11:11 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணி திட்டமிட்டப்படி தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமா? என்பதற்கு கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.

மும்பை, 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து தொடர் முடிந்ததும் உடனடியாக தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் வருகிற 17-ந்தேதி தொடங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது தென்ஆப்பிரிக்காவில் மிகவும் அபாயகரமான ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்திய அணி திட்டமிட்டபடி அங்கு சென்று விளையாடுமா என்பதில் குழப்பம் நிலவுகிறது. வீரர்களுக்கு உயரிய மருத்துவ உயிர் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது. இனி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதால், டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 3-ல் இருந்து 2-ஆக குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகின.

இந்த நிலையில் மும்பையில் நேற்று பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலியிடம் தென்ஆப்பிரிக்க தொடர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கோலி, ‘தென்ஆப்பிரிக்க தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? இதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நாங்கள் பேசி வருகிறோம். ஓரிரு நாட்களில் இது தொடர்பாக தெளிவான முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். எது எப்படி என்றாலும் இது வழக்கமான காலக்கட்டத்தில் விளையாடுவது போன்று இருக்காது. இங்கு நிறைய திட்டமிடல், நிறைய தயார்படுத்துதல் தேவைப்படுகிறது. தற்போதைய தொடரில் இடம் பெறாத சில வீரர்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இணைந்து, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதன் பிறகு தனி விமானத்தில் பயணிக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் முடிந்த அளவுக்கு தெளிவான நிலையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே அணியின் அனைத்து சீனியர் வீரர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது தொடர்பாக வீரர்களிடம் விவாதிக்க தொடங்கி உள்ளார். அது மிகவும் முக்கியமானது. இப்போதைக்கு எங்களது முழு கவனமும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் மீதே உள்ளது’ என்றார்.

விராட் கோலி ஏற்கனவே இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன்ஷிப்பை துறந்து விட்டார். இதையடுத்து இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். கோலியிடம் இருந்து ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியை பறித்து ரோகித் சர்மாவிடம், இப்போதே வழங்கினால் தான் 2023-ம் ஆண்டு உலக கோப்பைக்கு தயாராவதற்கு அவருக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும். கோலியை டெஸ்ட் கேப்டனாக மட்டும் தொடர வைக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் அடுத்த 7 மாதங்களில் இந்திய அணி 9 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆடுகிறது. எனவே அதுவரை கோலியை ஒரு நாள் அணியின் கேப்டனாக நீட்டிக்கலாம் என்று இன்னொரு தரப்பினரின் கருத்தாக உள்ளது.

இதற்கு மத்தியில், தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய சேத்தன் ஷர்மா தலைமையிலான இந்திய தேர்வு கமிட்டி ஓரிரு நாட்களில் கூடுகிறது. அப்போது கோலி ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக நீடிப்பாரா? அல்லது கழற்றிவிடப்படுவாரா? என்பது தெரிய வரும்.

Next Story