விஜய் ஹசாரே கோப்பை: சத்தீஷ்காருக்கு எதிரான ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சதம்


விஜய் ஹசாரே கோப்பை: சத்தீஷ்காருக்கு எதிரான ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சதம்
x
தினத்தந்தி 9 Dec 2021 10:35 PM GMT (Updated: 9 Dec 2021 10:35 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மராட்டிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சத்தீஷ்காரை வென்றது.

திருவனந்தபுரம்,

20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பை, கவுகாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ராஜ்கோட் உள்பட 7 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

புதுச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடிய பெங்கால் அணி 8 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. ஷபாஸ் அகமது ஆட்டம் இழக்காமல் 85 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய புதுச்சேரி அணி 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், வி.ஜெ.டி. விதிமுறைப்படி 8 ரன் வித்தியாசத்தில் புதுச்சேரி அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

‘டி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் மராட்டிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சத்தீஷ்காரை துவம்சம் செய்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை சொந்தமாக்கியது. இதில் முதலில் ஆடிய சத்தீஷ்கார் அணி 7 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்தது. 

அடுத்து ஆடிய மராட்டியம் 47 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் இழக்காமல் 154 ரன்கள் (143 பந்து, 14 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்து அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கினார். ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து அடித்த 2-வது சதம் இதுவாகும். மத்தியபிரதேசத்துக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்திலும் அவர் சதம் (136 ரன்கள்) விளாசி இருந்தார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தி முதலாவது வெற்றி கண்டது. மத்திய பிரதேச வீரர் வெங்கடேஷ் அய்யர் சதமும் (112 ரன், 84 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), 3 விக்கெட்டும் எடுத்து ஹீரோவாக ஜொலித்தார்.

Next Story