கோலியுடன் விளையாடிய தருணங்கள் சிறப்பானது - ரோகித் சர்மா


கோலியுடன் விளையாடிய தருணங்கள் சிறப்பானது - ரோகித் சர்மா
x
தினத்தந்தி 14 Dec 2021 3:36 PM GMT (Updated: 14 Dec 2021 3:36 PM GMT)

ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் அணி வெற்றி பெற வேண்டும் என்ற மனஉறுதியை கோலி வெளிப்படுத்தி இருக்கிறார்.

மும்பை ,

கடந்த நவம்பர் மாதம் முடிந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலகினார். அத்துடன் இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவி விராட்கோலியிடம் இருந்து கடந்த புதன்கிழமை பறிக்கப்பட்டது. டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டும் விராட்கோலி தொடருவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்திய ஒருநாள் போட்டி அணியின் புதிய கேப்டனாக 34 வயது ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. இந்திய அணியின் 20 ஓவர், ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 16-ந் தேதி முதல் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகிற 26-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் ஜனவரி 3-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 11-ந் தேதியும் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே ஜனவரி 19, 21 (இரண்டும் பார்ல்), 23 (கேப்டவுன்) ஆகிய தேதிகளில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் இருந்து ஒருநாள் போட்டியின் அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்று செயல்பட இருக்கிறார்.

தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய ஒருநாள் போட்டி அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் வாரிய டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக விராட்கோலி இந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக முன்னின்று வழிநடத்திய விதத்தை மறக்க முடியாது. ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும்  அவர் அணி வெற்றி பெற வேண்டும் என்ற மனஉறுதியையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அது ஒட்டுமொத்த அணிக்கும் அவர் கொடுக்கும் செய்தியாக இருக்கும். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பானதாகும். அவரது தலைமையின் கீழ் நான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவருடன் ஆடிய ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து விளையாடி இருக்கிறேன். அதனை இன்னும் தொடர்ந்து செய்வோம்.

கடைசியாக 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பிறகு நமது அணி ஐ.சி.சி. கோப்பையை வெல்லவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு பிறகு எங்களது ஆட்டத்தில் தவறு இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக தான் செயல்பட்டு இருக்கிறோம்.

இருப்பினும் கோப்பையை கைப்பற்றும் கூடுதல் முயற்சியில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்று நினைக்கிறேன். சவால் நிறைந்த சர்வதேச போட்டிகளில் இதுபோல் நடக்க தான் செய்யும்.

அடுத்து நிறைய உலக கோப்பை போட்டிகள் வர இருக்கின்றன. அந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோளாகும். கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் ஒரு அணியாக நாங்கள் செயல்முறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டியது அவசியமானதாகும். நீங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் முதலில் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அதன் பின்னர் இறுதி இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் ஒரு வீரராகவும், பிறகு ஒரு அணியாகவும் சிறந்து விளங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். சவால்கள் இருக்கும் போது அந்த கடினமான சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வருகிறீர்கள் என்பது முக்கியமானதாகும். தொடக்கத்தில் குறைந்த ரன்னுக்குள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை இழந்து கடினமான சூழ்நிலை உருவானால் அதில் இருந்து சிறப்பாக மீண்டு வருவதில் கடந்த காலங்களில் தவறி இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களை மனதில் கொண்டு முன்னோக்கி செல்ல முயற்சி செய்ய வேண்டியதும் ஒரு பகுதியாகும்.

அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் பொறுப்பு என்ன? அவர்களிடம் இருந்து அணி எதிர்பார்ப்பது என்ன? என்பது குறித்து தெளிவாக தகவல் தெரிவிக்க நானும், பயிற்சியாளரும் முயற்சிப்போம். வீரர்கள் தாங்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதன் நோக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் இணைந்து மூன்று 20 ஓவர் போட்டியில் மட்டுமே நான் பணியாற்றி இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், அருமையாகவும் இருக்கிறது. வீரர்களை அழுத்தமின்றி மகிழ்ச்சியாக வைத்து இருப்பது முக்கியமானதாகும். அந்த மாதிரியான சுமுக சூழல் நிலவுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story