விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: கால்இறுதியில் தமிழ்நாடு-கர்நாடகம் மோதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Dec 2021 8:30 PM GMT (Updated: 20 Dec 2021 8:30 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் கால்இறுதியில் தமிழ்நாடு-கர்நாடகம் இன்று மோதுகின்றன.

ஜெய்ப்பூர், 

20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இறுதி கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் லீக் மற்றும் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் முடிவில் இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம், சவுராஷ்டிரா, விதர்பா, கேரளா, சர்வீசஸ் ஆகிய அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

இன்று இரண்டு கால்இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. காலை 9 மணிக்கு தொடங்கும் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி, மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகாவை சந்திக்கிறது. தமிழக அணியில் பேட்டிங்கில் என்.ஜெகதீசன், பாபா இந்திரஜித், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், அதிரடி ஆட்டக்காரர் ஷாருக்கான் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். பந்து வீச்சில் சாய் கிஷோர், எம்.சித்தார்த், சஞ்சய் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல் கர்நாடக அணியில் பேட்டிங்கில் ரவிக்குமார் சமார்த், கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், மனிஷ் பாண்டே, கிருஷ்ணப்பா கவுதமும், பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, விஜய்குமார் விஷாக்கும் ஜொலித்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் இறுதிப்போட்டியில் தமிழக அணி கடைசி பந்தில் ஷாருக்கானின் சிக்சரின் உதவியுடன் கர்நாடகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அத்துடன் இந்த போட்டி தொடரின் லீக் சுற்றில் கர்நாடகாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்து இருந்தது. எனவே இந்த ஆட்டத்தில் கூடுதல் நம்பிக்கையுடன் தமிழக அணி களம் காணும். இரு அணியிலும் சிறந்த வீரர்கள் இடம் பெற்று இருப்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

காலை 9 மணிக்கு நடைபெறும் இன்னொரு கால்இறுதி ஆட்டத்தில் ரிஷி தவான் தலைமையிலான இமாச்சலபிரதேசம்-கரண் ஷர்மா தலைமையிலான உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றன.


Next Story