ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!
x
தினத்தந்தி 23 Dec 2021 2:32 PM GMT (Updated: 23 Dec 2021 2:32 PM GMT)

இந்திய அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

துபாய்,

9-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா நகரங்களில் 3 மைதானத்தில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது. 

இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், குவைத், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. டெல்லியை சேர்ந்த பேட்ஸ்மேன் யாஷ் துல் தலைமையில் களம் இறங்கியது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த  இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக ஹர்நூர் சிங் 120 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் இந்திய அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. வரும் சனிக்கிழமை இந்த போட்டி நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற மற்ற போட்டிகளில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானையும், இலங்கை அணி குவைத் அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றன.

Next Story