விஜய் ஹசாரே இறுதிப்போட்டி: தமிழகத்தை வீழ்த்தி இமாச்சல் அணி சாம்பியன்..!


விஜய் ஹசாரே இறுதிப்போட்டி: தமிழகத்தை வீழ்த்தி இமாச்சல் அணி சாம்பியன்..!
x
தினத்தந்தி 26 Dec 2021 12:47 PM GMT (Updated: 26 Dec 2021 12:47 PM GMT)

போதுமான வெளிச்சமின்மை காரணமாக வி.ஜே.டி விதிமுறை பின்பற்றப்பட்ட நிலையில் இமாச்சல் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஜெய்ப்பூர்,

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் கோப்பைக்காக இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு- இமாச்சலப்பிரதேச அணிகள் மோதின. 

இதில் டாஸ் வென்ற இமாச்சலப்பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாட்டின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபராஜித்தும், ஜெகதீசனும் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்தில் வெளியேறினர். அடுத்து வந்தவர்களும் சிறிது நேரத்தில் வெளியேற, தமிழக அணி தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்த தடுமாடியது.

 பின்னர் தினேஷ் கார்த்திக்கும், இந்திரஜித்தும் நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 116 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திரஜித்தும் 80 ரன்கள் குவித்தார். இறுதியில் தமிழ்நாடு 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்களை குவித்தது. இமாச்சல் அணியில் பங்கஜ் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இமாச்சல் அணியின் தொடக்க வீரரான சுப்மன் அரோரா 136 ரன்கள் குவித்தார். ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த போது, போதுமான வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் 47.3 ஓவர்களில் நிறுத்தப்பட்டது. அப்போது இமாச்சல் அணி 299 ரன்கள் எடுத்திருந்தது. 

இதனையடுத்து வி.ஜே.டி விதிமுறை பின்பற்றப்பட்டது. இதில் இமாச்சல பிரதேச அணி முன்னிலை வகித்ததால், அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இமாச்சல் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 136 ரன்கள் குவித்த சுப்மன் அரோரா ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்டார். கடைசி வரை போராடிய தமிழக அணிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.


Next Story