இந்திய அணியில் கேப்டன்ஷிப் பிரிப்புக்கு ரவிசாஸ்திரி ஆதரவு


இந்திய அணியில் கேப்டன்ஷிப் பிரிப்புக்கு ரவிசாஸ்திரி ஆதரவு
x
தினத்தந்தி 27 Dec 2021 10:26 PM GMT (Updated: 27 Dec 2021 10:26 PM GMT)

இந்திய அணியில் கேப்டன்ஷிப் பிரிப்புக்கு ரவிசாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணியில் கேப்டன்ஷிப் பிரித்து வழங்கப்பட்டிருப்பது சரியான முடிவு என்றே கருதுகிறேன். இதனை விராட் கோலி (டெஸ்ட் கேப்டன்) மற்றும் ரோகித் சர்மாவுக்கு (ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன்) கிடைத்துள்ள ஆசீர்வாதமாக நான் பார்க்கிறேன். 

ஏனெனில் இன்றைய சூழலில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து கொண்டு மூன்று வடிவிலான அணிகளையும் ஒரே வீரர் திறம்பட கையாள்வது மிகவும் கடினம். விராட் கோலி இனி தனது முழு கவனத்தையும் டெஸ்ட் கிரிக்கெட் மீது செலுத்த முடியும். விரும்புகிற வரை டெஸ்ட் அணியை வழிநடத்தலாம். மேலும் தனது ஆட்டம் குறித்து நன்கு சிந்திக்கவும் இது உதவும். நிச்சயம் அவர் இன்னும் 5-6 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார்.

இவர்கள் அணியை வழிநடத்தும் விதம் எனக்கு கபில்தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோரது கேப்டன்ஷிப்பை நினைவூட்டுகிறது. கபில்தேவ் போன்று விராட் கோலி களத்தில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். ரோகித் சர்மா, கவாஸ்கர் போன்று திட்டமிட்டு திறமையாகவும், பதற்றமின்றி பொறுமையாக செயல்படுகிறார்.

இந்திய அணியில் ரோகித் சர்மாவை ஒரு தொடக்க ஆட்டக்காரராக நிலைநிறுத்த வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதை செய்தும் காட்டினேன். ஒரு பேட்ஸ்மேனாக அவரது திறமையை என்னால் வெளிக்கொண்டு வர முடியவில்லை என்றால் நான் பயிற்சியாளராக தோற்றதாக அர்த்தம் என்று நினைத்தேன். ஏனெனில் ரோகித் சர்மாவிடம் நிறைய திறமைகள் உள்ளன.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

Next Story