வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்
x
தினத்தந்தி 8 Feb 2022 12:16 AM GMT (Updated: 8 Feb 2022 12:16 AM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர் என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.

ஆமதாபாத்,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தனது 1,000-வது ஒருநாள் போட்டியில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அசத்தியது. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் 176 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜாசன் ஹோல்டர் 57 ரன்னும், பாபியன் ஆலென் 29 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து சுலபமாக வெற்றியை சுவைத்தது. கேப்டன் ரோகித் சர்மா 60 ரன்னிலும், விராட்கோலி 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சூர்யகுமார் யாதவ் 34 ரன்னுடனும், தீபக் ஹூடா 26 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் 2 பவுண்டரி விளாசி 8 ரன்கள் எடுத்த விராட்கோலி சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். உள்ளூரில் இதுவரை ஒருநாள் போட்டியில் 5,002 ரன்கள் எடுத்து இருக்கும் விராட்கோலி 5 ஆயிரம் ரன் மைக்கல்லை தனது 96-வது இன்னிங்சில் கடந்துள்ளார். இதற்கு முன்பு இந்திய ஜாம்பவான் தெண்டுல்கர் 121 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிப்பிடித்ததே சாதனையாக இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

ரோகித் சர்மா மகிழ்ச்சி

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘நாங்கள் ஒரு அணியாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். ஒட்டுமொத்தத்தில் இந்த ஆட்டத்தில் நமது அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த போட்டிக்கு முன்பாக நாங்கள் எதனை சாதிக்க வேண்டும் என்று ஆலோசனை செய்தோமோ? அதனை எல்லாம் நேர்த்தியாக செய்தோம். கடைசி கட்டத்தில் ஜாசன் ஹோல்டர்-பாபியன் ஆலென் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்ததை எங்களது வியூகத்தின் மூலம் தகர்த்தோம். நமது பேட்டிங் மற்றும் பவுலிங் அணுகுமுறையில் மாற்றம் செய்ய தேவை ஏற்பட்டால் அதற்காக நிறைய விஷயங்களை செய்ய நான் திறந்த மனதுடன் தயாராக இருக்கிறேன். உண்மையை சொல்லப்போனால் நாங்கள் நிறைய மாற்றம் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நான் வீரர்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால் உங்களுக்கு நீங்களே சவாலாக இருக்க முயற்சியுங்கள். புதுமையான முயற்சிகளை செய்து பாருங்கள். ஆனால் நமது இறுதி இலக்கு அணிக்கு தேவையானதை சாதிப்பது தான். கடந்த 2 மாதங்களாக நான் விளையாடாவிட்டாலும், தீவிரமாக பயிற்சி எடுத்து இருந்ததால் எனது பேட்டிங்கில் நம்பிக்கையுடன் களம் கண்டேன். தொடக்கத்தில் ஆடுகளம் (பிட்ச்) மெதுவான தன்மையுடன் இருந்தது. இதனால் இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தது. உங்களது திட்டத்தை களத்தில் சரியாக அமல்படுத்தினால் எந்த அணியையும் கட்டுப்படுத்த முடியும். அதேபோல் எந்த அணிக்கு எதிராகவும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படலாம். ‘டாஸ்’ ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்துவதை நான் விரும்புபவன் கிடையாது. இருப்பினும் ‘டாஸ்’ வென்றால் அதனால் கிடைக்கும் அனுகூலத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆயிரமாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

பொல்லார்ட் கருத்து

தோல்வி குறித்து வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் கருத்து தெரிவிக்கையில், ‘22 ஓவர்கள் மீதம் இருக்கையில் தோல்வியை சந்தித்தது சரியானது இல்லை. எங்களால் 50 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாமல் போனது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். நான் உள்பட பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். நாங்கள் விரும்பிய முடிவு கிடைக்கவில்லை. நாங்கள் பேட்டிங் செய்கையில் பந்து நின்று வந்ததுடன் நன்கு திரும்பியது. நாங்கள் பவுலிங் செய்கையில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால் பந்து நழுவியது. இதனை சமாளிக்க நாங்கள் வழியை கண்டுபிடிக்க வேண்டும். கடைசி கட்டத்தில் ஜாசன் ஹோல்டர், பாபியன் ஆலென் பேட்டிங்கில் ஜொலித்ததும், பந்து வீச்சில் அல்ஜாரி ஜோசப், அகேல் ஹூசைன் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டதும் நல்ல அறிகுறியாகும். நாங்கள் சரிவில் இருந்து மீண்டு வந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’ என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அளித்த பேட்டியில், ‘வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் கடும் நெருக்கடி அளித்தார். ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்றதால் வேகமாக பந்து வீசினால் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவது கடினம் என்பதை புரிந்து அதற்கு தகுந்தபடி எனது பந்து வீச்சு வேகத்தில் மாற்றம் செய்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது’ என்று தெரிவித்தார்.

Next Story