ஐ.பி.எல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போக வாய்ப்புள்ள வீரர்கள் யார்? யார்?


ஐ.பி.எல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போக வாய்ப்புள்ள வீரர்கள் யார்? யார்?
x
தினத்தந்தி 10 Feb 2022 12:04 AM GMT (Updated: 2022-02-10T05:34:03+05:30)

ஐ.பி.எல் ஏலத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், சாஹல், ஷாருக்கான் உள்ளிட்ட வீரர்கள் அதிக தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு, 

15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடக்கிறது. புதிய அணிகள் தேர்வு செய்த மற்றும் தக்கவைக்கப்பட்ட மொத்தம் 33 வீரர்களை தவிர்த்து மற்றவர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். இது மெகா ஏலம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏலப்பட்டியலில் மொத்தம் 590 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். 2018-ம் ஆண்டு ஏலத்தில் 4 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் ஏலம்போனார்கள். இந்த தடவை 10 அணிகள் களம் இறங்குவதால் ரூ.10 கோடி இலக்கை தாண்டும் வீரர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம். அதிக தொகைக்கு விலைபோக வாய்ப்புள்ள வீரர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

ஸ்ரேயாஸ் அய்யர் (இந்தியா): நிலைத்து நின்று அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களில் ஒருவரான 27 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் 2019, 2020-ம் ஆண்டுகளில் டெல்லி அணிக்கு தலைமை தாங்கி பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்து சென்றார். ஆனால் டெல்லி அணி ரிஷாப் பண்டை கேப்டனாக தேர்வு செய்திருப்பதால், ஸ்ரேயாஸ் அய்யர் ஏலத்திற்கு வந்துள்ளார். பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தங்கள் அணிக்கு புதிய கேப்டனை தேடி வருவதால் ஸ்ரேயாஸ் அய்யரை குறி வைக்கலாம். இவரது அடிப்படை விலை ரூ.2 கோடி என்றாலும் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டேவிட் வார்னர்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5,449 ரன்கள் (150 ஆட்டம்) குவித்துள்ள ஆஸ்திரேலியாவின் வார்னர் ஐதராபாத் அணிக்கு 2016-ம் ஆண்டு கோப்பையை வென்று தந்தார். கடந்த சீசனில் கொஞ்சம் தடுமாறியதால் பாதியிலேயே அவரை ஐதராபாத் அணி நிர்வாகம் ஓரங்கட்டிவிட்டு வில்லியம்சனை கேப்டனாக்கியது. அதன் பிறகு நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த வார்னர் மொத்தம் 289 ரன்கள் சேர்த்து தொடர்நாயகனாக ஜொலித்தார். இன்னும் தன்னால் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். இதனால் வார்னருக்கு மீண்டும் ‘ஜாக்பாட்’ அடிக்கலாம். வார்னரின் ஆரம்ப விலை ரூ.2 கோடியாகும்.

இஷான் கிஷன் (இந்தியா): விக்கெட் கீப்பரான இஷான் கிஷன் அதிரடியாக மட்டையை சுழற்றக்கூடியவர். 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 30 சிக்சர்கள் நொறுக்கி சாதனை படைத்தார். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய அவர் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 16 பந்துகளில் அரைசதம் விளாசி வியப்பூட்டினார். வலுவான ஷாட்டுகள் அடிக்கக்கூடிய இவர் தொடக்க வரிசைக்கு பொருத்தமான வீரர். மிடில் வரிசையிலும் அவரால் அசத்த முடியும். தொடக்க விலை ரூ.2 கோடியில் இருந்து நாலைந்து மடங்கு எகிறினாலும் ஆச்சரியமில்லை.

தீபக் சாஹர் (இந்தியா): வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 2018-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். ‘பவர்-பிளே’யில் பந்து வீசுவதில் கைதேர்ந்தவர் என்று வர்ணிக்கப்படும் அவர் இந்த 4 ஆண்டுகளில் சென்னை அணிக்காக ‘பவர்-பிளே’யில் மட்டும் 42 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சமீபகாலமாக அவர் ஆல்-ரவுண்டராகவும் உருவெடுத்துள்ளார். இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் பின்வரிசையில் இறங்கி அரைசதம் அடித்தார். வேறு வழியின்றி அவரை சென்னை அணி நிர்வாகம் கழற்றி விட்டாலும் மீண்டும் அவரை இழுக்க ஆர்வம் காட்டுகிறது. ஆனால் மேலும் பல அணிகள் அவரை வாங்க மல்லுகட்டும் என்பதால் ரூ.2 கோடியில் இருந்து எகிறக்கூடும்.

ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்): வேகப்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டரான 30 வயதான ஜாசன் ஹோல்டரின் ஆட்டத்திறன் கடந்த இரு ஆண்டுகளாக மெருகேறி வருகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதுகெலும்பாக உள்ளார். அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் சாய்த்து வரலாறு படைத்தார். ஐதராபாத் அணிக்காக கடந்த ஐ.பி.எல்.-ல் 2-வது பகுதியில் ஆடிய அவர் 16 விக்கெட் வீழ்த்தினார். அவரை போன்ற வீரருக்கு கிராக்கி இருப்பதால் ஹோல்டர் இந்த முறை கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது ஆரம்ப விலை ரூ.1½ கோடியாகும்.

யுஸ்வேந்திர சாஹல் (இந்தியா): மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்து வீசக்கூடிய யுஸ்வேந்திர சாஹல் ஐ.பி.எல்.-ல் இதுவரை 139 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த மாதிரியான சுழற்பந்து வீச்சாளரின் தேவை அதிகமாக இருப்பதால் இவருக்கு நல்ல மவுசு இருக்கும். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ரூ.6 கோடி ஊதியம் பெற்று விளையாடி வந்தார். இந்த தடவை அதை தாண்டுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா): வேகப்பந்து வீச்சாளரான ரபடா கடந்த 3 ஐ.பி.எல். சீசன்களையும் சேர்த்து அதிக விக்கெட் (70 விக்கெட்) அறுவடை செய்தவர் ஆவார். துல்லியமாக பந்து வீசி நெருக்கடி கொடுப்பதில் கில்லாடி. கொஞ்சம் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்திருந்தாலும் தொடக்க வரிசை பவுலராக பயன்படுத்திக் கொள்ள முடியும். இவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.

ஷாருக்கான் (இந்தியா): இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிக்காத ஷாருக்கான் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டவர் ஆவார். கடைசி கட்டத்தில் குறைந்த பந்துகளில் நிறைய ரன் தேவைப்படும் போது அந்த பணியை செய்வதில் திறமைசாலி. கடந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட போது சிக்சர் விளாசி தமிழக அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 6 அடி 4 அங்குல உயரமும், பொல்லார்ட் போன்ற தசைபலமும் ஷாருக்கானின் தனி அடையாளம். அடிப்படை விலை ரூ.40 லட்சம் என்றாலும் இவர் கோடிகளில் புரளப்போவது உறுதி.

இதே போல் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர், ஷிகர் தவான், வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல், ஸ்டீவன் சுமித், கம்மின்ஸ், பிளிஸ்சிஸ், ஹசரங்கா, பேர்ஸ்டோ உள்ளிட்டோரும் கணிசமான தொகைக்கு விலை போக வாய்ப்புள்ளது.

Next Story