குருணல் பந்துவீச்சில் ஆட்டமிழந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா


குருணல் பந்துவீச்சில் ஆட்டமிழந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா
x
தினத்தந்தி 29 March 2022 9:00 PM GMT (Updated: 29 March 2022 9:00 PM GMT)

'நாங்கள் தோற்று இருந்தால் குருணல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தது மிகுந்த வேதனையை அளித்து இருக்கும்' என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

மும்பை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் இலக்கை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 2 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் பின்னர் குஜராத் கேப்டன்ஹர்திக் பாண்ட்யா கூறுகையில் ‘இந்த ஆட்டம் எங்களுக்கு சரியானதாக அமைந்தது. வெற்றியோடு தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சற்று உதவிகரமாக இருந்தால் முகமது ஷமியால் நேர்த்தியாக செயல்பட முடியும். ஷமி (3 விக்கெட்) எங்களுக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். பேட்டிங்கில் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்காகவே முன்கூட்டியே (4-வது வரிசையில்) நான் களம் இறங்கினேன்.

இந்த ஆட்டத்தில் ஒருவேளை நாங்கள் வெற்றி பெறாமல் போயிருந்தால் குருணல் பாண்ட்யா (ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர்) பந்து வீச்சில் நான் ஆட்டம் இழந்தது அதிக வேதனையை தந்து இருக்கும். ஆனால் குருணல் பாண்ட்யா எனது விக்கெட்டை எடுத்தார். நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். இதனால் குடும்பத்தில் எல்லாம் சரிசமமாக போய்விட்டது. அதனால் மகிழ்ச்சி தான்.’ என்றார். ஹர்திக் பாண்ட்யா 33 ரன்னில், குருணல் பாண்ட்யாவின் சுழற்பந்து வீச்சில் கேட்ச் ஆனது குறிப்பிடத்தக்கது.

Next Story