‘அதிகமான பனிப்பொழிவால் பந்து வீச கடினமாக இருந்தது’ - சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் பேட்டி


‘அதிகமான பனிப்பொழிவால் பந்து வீச கடினமாக இருந்தது’ - சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் பேட்டி
x
தினத்தந்தி 2 April 2022 12:21 AM GMT (Updated: 2 April 2022 12:21 AM GMT)

நயாகரா நீர்வீழ்ச்சி போல் மைதானத்தில் பனிப்பொழிவை பார்க்க முடிந்தது என சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் முதலில் ஆடிய சென்னை அணி 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ 19.3 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. 23 பந்துகளில் 55 ரன்கள் விளாசி ஆட்ட இழக்காமல் இருந்த லக்னோ வீரர் இவீன் லீவிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முக்கியமான கடைசி 2 ஓவர்களை வீசுவதற்கு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் போனது சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்தது. 19-வது ஓவரை வீசிய ஷிவம் துபே 25 ரன்கள் விட்டுக்கொடுத்து வெற்றியை தாரைவார்க்க வழிவகுத்தார். சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். ஐ.பி.எல். வரலாற்றில் முதல் 2 ஆட்டங்களில் சென்னை அணி தோற்றது இதுவே முதல்முறையாகும்.

தோல்விக்கு பிறகு சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அளித்த பேட்டியில் ‘ஆரம்பகட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த முடியாத நிலை தான் இருந்தது. ஏனெனில் அந்த அளவுக்கு ஈரப்பதம் இருந்ததால் பந்தை சரியாக பிடித்து வீசுவதற்கு ‘கிரிப்’ கிடைக்காமல் சிரமப்பட்டோம். நயாகரா நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டுவது போல் மைதானத்தில் பனிப்பொழிவை பார்க்க முடிந்தது. பனியின் தாக்கத்தால் பீல்டிங் செய்வதும் கடினமாக இருந்தது.

நாங்கள் 210 ரன்கள் குவித்தாலும் அந்த ரன்னுக்குள் எதிரணியை மடக்குவது கடினம் என்பதை உணர்ந்திருந்தோம். ஏனெனில் சீதோஷ்ண நிலை 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருந்தது. பனிப்பொழிவின் அனுகூலத்தை எதிரணியினர் கச்சிதமாக பயன்படுத்தி கொண்டனர். எப்படியும் கடைசியில் ஒரு ஓவரை யாரை வீச வைப்பது என்பதில் சிக்கல் வரும் என்பது எங்களுக்கு தெரியும். 19-வது ஓவருக்கு ஷிவம் துபேவை அழைப்பது என்பது போட்டியின் போது எடுக்கப்பட்ட முடிவாகும்.’ என்றார்.

Next Story