வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி


தென் ஆப்பிரிக்க அணியினர்
x
தென் ஆப்பிரிக்க அணியினர்
தினத்தந்தி 12 April 2022 2:21 AM GMT (Updated: 12 April 2022 2:21 AM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

போர்ட் எலிசபெத், 

வங்காளதேச கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் கடந்த 8-ந் தேதி தொடங்கியது. 

தென் ஆப்பிரிக்கா வெற்றி

இதில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 453 ரன்னும், வங்காளதேசம் 217 ரன்னும் எடுத்தன. 236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 413 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 3-வது நாள் முடிவில் 9.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி, தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 23.3 ஓவர்களில் 80 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 332 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 27 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 20 ரன்னும், தமிம் இக்பால் 13 ரன்னும் எடுத்தனர். கேப்டன் மொமினுல் ஹக் (5 ரன்) உள்பட மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் கேஷவ் மகராஜ் 7 விக்கெட்டும், சிமோன் ஹர்மெர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர். 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள் யாரையும் பயன்படுத்தவில்லை. 

இதேபோல் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சிலும் இதே 2 சுழற்பந்து வீச்சாளர்கள் (கேஷவ் மகராஜ் 7 விக்கெட், சிமோன் ஹர்மெர் 3 விக்கெட்) மட்டுமே பந்து வீசி எல்லா விக்கெட்டுகளையும் கபளீகரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். அவர் இந்த டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டும், இந்த போட்டி தொடரில் மொத்தம் 16 விக்கெட்டும் மற்றும் 108 ரன்களும் எடுத்தார்.

தொடரை கைப்பற்றியது

இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்று ஆடிய சாரெல் எர்வீ, வியான் முல்டெர் ஆகியோர் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று காலை போட்டியில் இருந்து விலகினர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக கயா சோன்டோ, கிளென்டர் ஸ்டூர்மேன் ஆகியோர் களம் இறங்கினார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கொரோனா பாதிப்பு காரணமாக மாற்று வீரர் களம் இறங்கியது இது முதல் நிகழ்வாகும்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் அந்த அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. முன்னதாக நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

கேஷவ் மகராஜ் சாதனை

முதல் டெஸ்டின் 4-வது இன்னிங்சில் (எதிரணி இலக்கை விரட்டும் இன்னிங்ஸ்) 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் இந்த டெஸ்டில் 4-வது இன்னிங்சிலும் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்தார். 

இதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டி வரலாற்றில் 4-வது இன்னிங்சில் தொடர்ச்சியாக 2 முறை 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

Next Story